பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

345


11. சிலப்பதிகாரம் பொதுமக்கள் காப்பியம்-நாடகக் காப்பியம். ஆதலால் அதன்கண் ஆற்றுவரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, கன்றக்குரவை, ஊசல் வரி, அம்மானை முதலிய பலவகைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தொல்காப்பியம் - செய்யுளியலையும் அதன் உரைகளையும் காண்போர் இப்பாடல்கள் செய்யுளியற் செய்திகட்கு உட்பட்டவையே என்பதை எளிதில் உணர்தல் கூடும்.

12. பார்ப்பனி கீரிப்பிள்ளையைக் கொன்றது. பஞ்ச தந்திரக்கதையில் சொல்லப்பட்டுள்ளது என்பது ஒரு வாதம். பஞ்சதந்திர நூலைப்பற்றிய உண்மை வரலாறு கிடைக்கவில்லை. அதன் உருவம் காலப்போக்கில் மாறுதல் அடைந்ததா இல்லையா என்பதும் விளங்கவில்லை. அது. பாரசீக அரசன் கொச்ரெள அனோவர்ஷன் (கி.பி.531-579) என்பவனால் பஹ்லவி மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிற நாட்டினரின் மதிப்பைப்பெறும் பெருமையை இந்நூல் அடைவதற்கு இந்நிலையில் நூறு ஆண்டுகளாவது சென்றிருக்க வேண்டுமாதலின் இது கி. பி. 5ஆம் நூற்றாண்டில் எழுதியிருக்கலாம் என்று. அறிஞர்கள் கருதுகின்றனர். உபகதைகள் பல பெளத்த மத நூல்களில் காணப்படுகின்றன. புத்தரின் ஜாதகக் கதைகள் கூறும் நூல்களில் உள்ள உபகதைகளைத் தழுவி எழுந்த கதை நூல்களில் பஞ்சதந்திரம் சிறப்பானது.9

பிள்ளையவர்கள் கூறும் பஞ்சதந்திரக் கதைகளே புத்த சாதகக் கதைகள் முதலிய நூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை. எனவே, ஒவ்வொரு கதையின் காலம் இன்னது என்று எவராலும் கூறுதல் இயலாது. கீரிப்பிள்ளையின் கதை பஞ்சதந்திர நூல் உண்டாவதற்கு முன்னரே நாட்டில் வழங்கப்பட்ட கதையாய் இருக்கலாம். அது கோவலனோடு தொடர்புண்ட கதையாயிருந்து வடநாட்டுக் கதைகளில் உரு மாறியும் இருக்கலாம்.


9. கலைக்களஞ்சியம் 6, பக்.643.