பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348

தமிழ் மொழி—இலக்கிய வரலாறு

மதுரைக்குச் சென்றனர். கோவலன் மதுரையிற் கொலையுண்டான். கணவனை இழந்த கண்ணகி சேர நாட்டிற்குச் சென்றாள்; அங்கிருந்து விண்ணகம் புகுந்தாள்; அதனால் சேர நாட்டுத் தலைநகரான வஞ்சியில் இருந்த செங்குட்டுவனால் வணங்கப்பட்டாள். எனவே, கோவலன்-கண்ணகி வரலாறு சேர, சோழ, பாண்டிய நாடுகளோடும், அந்நாடுகளின் தலைநகரங்களோடும், அந்நாட்டு மன்னர்களோடும் தொடர்புடையதாயிற்று. தமிழகத்தில் சேர, சோழ,பாண்டிய நாடுகளே மிக்க சிறப்புடையவை. அச்சிறப்புடைய நாடுகள் மூன்றும் இவ்வரலாற்றில் பிணைக்கப்பட்டு விட்டன. அதனால் இவ்வரலாறு புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என மூன்று பெரும் பிரிவுகளாய்ப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்நூலில் உள்ள வேட்டுவவரி என்னும் பாடலால் பாலைநில மக்களுடைய பண்புகளையும், ஆய்ச்சியர் குரவை என்னும் பாடலால் முல்லைநில மக்களுடைய பண்புகளையும், குன்றக்குரவை என்னும் பாடலால் குறிஞ்சிநில மக்களுடைய செயல்களையும் பிறவற்றையும் நாம் நன்கு அறியலாம். இந்நூலிலிருந்து சைவம், வைணவம், சமணம் என்னும் சமயங்களைப் பற்றிய செய்திகளையும் அறியலாம். காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பையும், அக்கால இசை-நடனக்கலைகளைப்பற்றிய செய்திகளையும் விழாக்களையும் மக்கள் பழக்கவழக்கங்களையும் அரசியலையும் தமிழர் நாகரிகத்தையும் பண்பாட்டையும் இந்நூலின் உதவி கொண்டு நன்கு தெளியலாம்.

இந்நூல் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் விரவப்பெற்றது; இனிய-எளிய நடையில் இயன்றது; உவகை, அவலம், வீரம் முதலிய ஒன்பான் சுவைகளையும். ஒருங்கே பெற்றது. இத்தகுதிகள் அனைத்தும் பெற்ற ஒப்பற்ற தமிழ்க்காவியம் என்று இதனைக் கூறலாம். அதனாற்றான் காலஞ்சென்ற கவியரசர் பாரதியார்,