பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350

தமிழ்மொழி—இலக்கிய வரலாறு

படித்துப் படித்து வியத்தற்குரியதாகும் (காதை 28,வரி 67-77).

இசைக்கலை

பூம்புகாரின் கடற்கரையில் கோவலனும் மாதவியும் பாடிய கானல்வரிப் பாடல்கள் இசைக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இளங்கோவடிகள், தனித்திருந்த மாதவி யாழ் வாசித்த திறத்தினை வேனிற் காதையில் (வரி 23-44) கூறியுள்ளமை இக்கலையின் சிறப்பினை அறிவிக்கும் மற்றோர் சான்றாகும்.

இந்திரவிழா

மணிமேகலையிலும் சிலப்பதிகாரத்திலுமே இந்திரவிழா விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம் இந்திர விழவூரெடுத்த காதையில் விழா நிகழ்ச்சிகள் தெளிவாய்த் தரப்பட்டுள்ளன. அவ்விழா இருபத்தெட்டுநாள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம். விழா முடிந்த அடுத்த நாள் அனைவரும் கடலாடுதல் வழக்கம். அவ்விழாவில் மாதவி பலவகை நடனங்களை ஆடிக்காட்டினாள். சமயவாதிகள் தத்தம் சமயக்கொள்கைகள் பற்றி விரிவுரையாற்றினர். வடநாட்டினரும் இவ்விழாவைக் காண வந்திருந்தனர்.

தமிழர் வீரம்

செங்குட்டுவன் மான உணர்ச்சி மிகுந்த தமிழன்; கங்கைக்கு வடபால் இருந்த கனகன் விசயன் என்ற வேந்தர் தமிழர் ஆற்றலைப் பழித்துரைத்தனர் என்பதை முனிவர் வாயிலாய் உணர்ந்த செங்குட்டுவன் கடுஞ் சீற்றம் கொண்டான்; அவ்வேந்தரைத் தக்கவாறு தண்டிக்க விரும்பினாள்; அவரைத் தண்டிக்கும் நோக்குடனேயே செல்வதாய் நூற்றுவர் கன்னர் விடுத்த அரசியல் தூதுவனிடமும் கூறினாள்; தான் விரும்பியபடியே அவ்வேந்தரை வென்று அவர்தம் தலைகள்மீது பத்தினியின் உருவம் பொறிக்கத்தக்க சிலையை ஏற்றி வஞ்சிமாநகர்க்குக் கொண்டு வந்தான்.