பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

353


நூலாசிரியர் தமது இனம், நாடு, சமயம் என்னும் பற்று மிக்கவராய் நடுவுநிலை தவறிப் பிறநாடு, மொழி, சமயங்களைத் தமது நூலுள் இழிவுபடுத்தலாகாது. இது சிறந்த நூலாசிரியர் கடமையாகும். இச்சிறந்த கடமையுணர்ச்சி இளங்கோவடிகளிடம் வெள்ளிடைமலையோல் விளக்கமாய்த் தெரிகின்றது.

(1) ஒவ்வொரு காண்டத்தின் இறுதியிலும் அக்காண்டத்திற்குரிய நாட்டு மன்னர்களையும், அவர்தம் நாட்டையும், அவர்தம் சிறப்பியல்புகளையும், ஒருபடித்தாய்ப் பாடியுள்ளமை இளங்கோவடிகளின் நடுவுநிலைமைக்குச் சான்றாகும். அவர் புகார்க் காண்டத்தில் சோழரையும், மதுரைக் காண்டத்தில் பாண்டியரையும், வஞ்சிக் காண்டத் தில் சேரரையும் நடுவுநிலை பிறழாமல் பாராட்டியுள்ளமை படித்து இன்புறத்தக்கது.

(2) வேட்டுவ வரியில் பாலைநில மக்கள் கொற்றவையை வழிபடும் முறை மிகவும் விளக்கமாய்க் கூறப்பட்டுள்ளது. இளங்கோவடிகள் வேட்டுவராய் இருந்தே அக் காதையைப் பாடியுள்ளார் என்று கூறுவது பொருத்தமாகும்; இங்ஙனமே ஆய்ச்சியர் குரவையும் அமைந்துள்ளது. ஆய்ச்சியர் குரவையில் கீழ்வரும் செய்யுளைக் காண்க:

"மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் காற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே
நாராய ணாவென்னா நாவென்ன நாவே."

சிறந்த வைணவர் உருக்கமாய்ப் பாடியுள்ளது போலச் சமணத்துறவியாகிய இளங்கோவடிகள் இதனைப் பாடியுள்ளதை நோக்க, அவரது உண்மை ஆசிரியப் பண்பு

த-23