பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

354

தமிழ்மொழி-இலக்கிய வரலாறு


குன்றின்மேலிட்ட விளக்கென ஒளிர்தலைக் காணலாம். அவர் இங்ங்னமே குன்றக் குரவையில் முருகனைப் பற்றிய எல்லாச் செய்திகளையும் விரிவாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார்.

கண்ணகி வரலாறு முழுமையும் கூறிய ஆசிரியர் வாழ்த்துக் காதையில் மூவேந்தர் ஆறுகளையும் சிறப்பித்துப் பாடியுள்ளார்; சோழன் சிறப்புக்களை அம்மானை வரியிலும், பாண்டியன் சிறப்புக்களைக் கந்துக வரியிலும், சேரன் சிறப்புக்களை ஊசல்வரியிலும் அமைத்துப் பாடியிருத்தல் அருமைப்பாடுடையது. வாழ்த்துக் காதையின் இறுதியில் அமைந்துள்ள வள்ளைப்பாட்டில் மூவேந்தர்களையும் பாராட்டியுள்ளமை அவரது நடுவுநிலைமையை மிகுத்துக் காட்டுகிறது.

கானல்வரிப் பாடல்கள் அடிகளாரது இசைப் புலமையினை நன்கு விளக்குவதாகும்; அரங்கேற்று காதைச் செய்திகளும் கூத்தச்சாக்கையன் நடனம் பற்றிய பகுதிகளும் ஆசிரியரது நடனக்கலை அறிவை நன்கு தெரிவிப்பனவாகும். மலைநாட்டில் கேட்கப்படும் ஒசைகள், மலைவாணர் செங்குட்டுவனுக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்த மலைநாட்டுப் பொருள்கள் பற்றிக் கூறும் பகுதி அடிகளாரது குறிஞ்சிநில அறிவைத் தெற்றெனத் தெரிவிக்கின்றது. செங்குட்டுவன் கனகவிசயரோடு புரிந்த போரினை வருணிக்கும் பகுதி (காதை 26) ஆசிரியரது போர் பற்றிய அறிவை வெளிப்படுத்துவதாகும். ஆசிரியர் கவுந்தியடிகள் வாயிலாகச் சமண சமயக் கொள்கைகளை ஆங்காங்கு வற்புறுத்தியுள்ளார். ஆசிரியர் கோவில்களைப் பற்றிக்கூற நேர்ந்தபோது முதலில் சிவபெருமான் கோவிலைக் குறிப்பிடுதல் அவரது பரந்த சமயப் பொதுமையை அறிவுறுத்துவதாகும் , ஆசிரியர் இந்நூலின் இறுதியில் கூறியுள்ள அறிவுரை, அவரது மேம்பட்ட ஒழுக்கத்தை உணர்த்துகிறது. இத்தகைய சிறப்புக்கள் பல கொண்டுள்ள நூலாதலின், சிலப்பதிகாரம் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரமாய் விளங்குகிறது.