பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

360

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


கிறது. இதில் கூறப்பட்ட இந்திரவிழாவும் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்ட இந்திரவிழாவும் காவிரிப்பூம்பட்டினத்திலேயே நடைபெற்றவை. இவ்விழா இருபத்தெட்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.

2. மூவகைப் பத்தினிப் பெண்டிர்: கணவனை இழந்த பெண்டிர் உடனே கணவனுடன் எரி மூழ்கி இறப்பர்; சிலர் தனியே எரி வளர்த்து அதனில் வீழ்ந்து இறப்பர்; வேறு சிலர் கணவனை நினைந்து அடுத்த பிறவியில் அவனுடன் வாழ்வதற்காகக் கைம்மை நோன்பு நோற்பர் (காதை 2).

3. உடலின் இழிவு: மணிமேகலையின் தோழியான சுதமதி, மணிமேகலையை விரும்பிவந்த உதயகுமரன் என்ற சோழ இளவரசனை நோக்கி, அவனால் விரும்பப்படும் உடலின் இழிவை எடுத்துரைக்கும் பகுதி படித்து அறியத்தக்கது.

“வினையின் வந்தது வினைக்குவிளை வாயது
புனைவன நீங்கின் புலால்புறத் திடுவது
மூப்புவிளி வுடையது தீப்பிணி இருக்கை
பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம்
புற்றடங்கரவின் செற்றச் சேக்கை
அவலக் கவலை கையா றழுங்கல்
தவலா உள்ளம் தன்பால் உடையது
மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து
மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய்.”

-காதை 4, வரி 113-121

4. உடல் அடக்க முறைகள்: சங்ககாலத்தில் இறந்தவர் உடலைச் சுடுதல், வாளா இட்டுப் போதல், தோண்டப்பட்ட குழியில் இடுதல், தாழ்ந்த இடங்களில் அடைத்து வைத்தல், தாழியினால் கவித்தல் என்னும் முறைகள் கையாளப்பட்டன (காதை 6, வரி 60-67).