பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

364 தமிழ்மொழி-இலக்கிய வரலாறு

அணிந்திருந்த மாலையைப் போட முயன்றான். அதனை அறிந்த மன்னன் அவனையும் வாளால் வெட்டி வீழ்த்தினான் (காதை 22). சோழ மன்னர் நீதி வழுவாதவர் என்பதற்கு இவை ஏற்ற சான்றுகளாகும்.

13. தீயவை பத்து: கொலை, களவு, காமம், பொய், குறளை, கடுஞ்சொல், பயனில் சொல், வெஃகல், வெகுளல், பொல்லாக் காட்சி ஆகிய பத்தும் தீயவை (காதை 24, வரி 125–130.)

14. அரசர்க்கு அறிவுரை:

“அரசர் தாமே யருளறம் பூண்டால்

பொருளு முண்டோ பிறபுரை தீர்த்தற்கு

அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்

மறவாது இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்

உண்டியும் உடையும் உறையுளும் அல்லது

கண்டதில்” .

 -காதை 25 வரி 226-231

சமயக் கருத்துக்கள்

சங்க காலத்தில் சைவம், வைணவம், பெளத்தம், சமணம் முதலிய பல சமயங்கள் தமிழகத்தில் இருந்தன என்பதை எட்டுத் தொகை நூல்களால் அறியலாம். ஆயின், எத்துணைச் சமயங்கள் அக்காலத்தில் இருந்தன என்பதை மணிமேகலையால்தான் நன்கறிதல் கூடும். மணிமேகலை என்னும் காவியத்தில் 27ஆம் காதையில் பல சமயவாதிகள் வஞ்சிமாநகரில் இருந்தனர் என்பது கூறப்பட்டுள்ளது. அவருள் வைதிகவாதி, சைவவாதி. பிரமவாதி, ஆசீவக வாதி, நிகண்டவாதி, சாங்கிய வாதி, வைசேடிகவாதி , பூத வாதி. பெளத்தவாதி என்பவர் குறிப்பிடத்தக்கவராவர். இவர்களுடைய சமயக்கொள்கைகள் 27ஆம் காதையில் கூறப்பட்டுள்ளன. 29ஆம் காதையிலும் 30ஆம் காதையிலும் பெளத்த சமயக் கொள்கைகளும் கருத்துக்களும் அறிவுறுத்தும் முறையில் கூறப்பட்டுள்ளன.