பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

367

பட்ட வல்லுநரால் இயற்றப்பட்ட ஓவியத்தொழில் அமைந்த துகில் போர்த்ததுபோலக் காணப்பட்டதாம் (காதை 3, வரி 160-169).

மணிமேகலையும் சுதமதியும் மலர்வனம் நோக்கிச் சென்றபொழுது காவிரிப்பூம்பட்டினத்துத் தெருக்களில் சில நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர் அந்நிகழ்ச்சிகளைத் தம் புலமைத்திறன் விளங்கும்படி பாடியுள்ளமை படித்து இன்புறத்தகும். குடிகாரன் ஒருவன் சமணத் துறவியின் பின் சென்று அவனைப் பரிகசித்தல் ஒரு காட்சியாகக் கூறப்பட்டுள்ளது. பித்தன் செயல்கள் இரண்டாம் காட்சியாகக் காட்டப்பட்டுள்ளன. பேடிபோல வேடமிட்டுக் கண்ணன் மகன், வாணனது பேரூரில் ஆடிய பேடிக் கூத்து ஒரு தெருவில் ஆடப்பட்டது. ஆசிரியர் அப்பேடிக் கோலத்தை அழகுற வருணிக்கிறார். இப்பகுதிகள் சாத்தனாரது பாத்திறனை நமக்கு நன்கு விளக்குவனவாகும்.

ஆசிரியர் புகாரை வனப்பு மிகுந்த ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி வருணித்திருப்பது படிக்கப்படிக்கச் சுவை பயப்பதாகும் (காதை 5, வரி 109-122) ,

இவ்வாறே சாத்தனார் அந்திப்பொழுதை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி வருணித்திருத்தல் அவரது புலமையை அழகுற அறிவிப்பதாகும் (காதை 5, வரி 123-141).

ஆசிரியர் சக்கரவாளக் கோட்டத்தைத் திறம்படப் பல வரிகளில் வருணித்துள்ளார். அக்கோட்டத்தில் இறந்தவர் பொருட்டு எடுக்கப்பெற்ற சமாதிகள் இத்தகையவை என்று ஆசிரியர் கூறியுள்ளது கவனிக்கத்தகும்;

“அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும்
ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும்

நால்வேரு வருணப் பால்வேறு காட்டி”