பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

தமிழ்மொழி-இலக்கிய வரலாறு

நினைந்து அவன் தந்தையான அருச்சுனன் புலம்பும் பகுதியைப் படிப்பவர், தாமும் கண்ணீர்விட்டு அழுதலைப் பார்க்கின்றோம். இறப்பு எல்லோருக்கும் பொது; இறந்தது குறித்துப் புலம்புதலும் பொது. எனவே, இப்பகுதி அனைவர் உள்ளங்களையும் ஈர்க்கின்றது,

வாழ்க்கை நிகழ்ச்சிகளை எவரும் கூறலாம். ஆயின், அவற்றைச் சாதாரண மனிதன் கூறுவதற்கும் இலக்கிய இலக்கணம் கற்றுள்ள புலவன் கூறுதலுக்கும் நிறைந்த வேறுபாடு உண்டு. சாதாரண மனிதன் கூறுவது ‘எலும்புக் கூடு’ போன்றது. கற்று வல்ல புலவன் கூறுவது ‘உயிருள்ள உடல்’ போன்றது. சிறந்த புலமை வாய்ந்த சான்றோர் கலைத்திறம் பொருந்தப் பொருளைப் புகட்டுவதால் மட்டுமே நம் உணர்வு கவரப்படுகின்றது. இன்ன பொருளை இன்னின்ன சொற்களால் இன்னின்னவாறு இன்னின்ன அமையத்தில் சொல்லவேண்டும் என்பதை அப்பெரு மக்கள் நன்கறிவார்கள். அவர்கள் செய்யும் செய்யுட்களோ, நூல்களோ கற்பவர் உள்ளத்தைப் பிணைக்க வல்லவை. இவ்வாறு சிறந்த முறையில் ஆக்கப் பெற்ற நூல்கள் ‘தலையாய இலக்கியங்கள்’ என்று அறிஞரால் கருதப் பெறும். அப்பெருமக்களது செய்யுட் சிறப்பினை நன்கு உணர்ந்த கம்பர் பெருமான் பின்வருமாறு பாராட்டுதல் காண்க;

“புவியினுக் கணியாய் ஆன்ற பொருள் தந்து புலத்திற் றாகி
அவியகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறிய ளாவிச்
சவியுறத் தெளிந்து தண்ணென் றொழுக்கமும் தழுவிச் சான்றோர்
கவியெனக் கிடந்த கோதா விரியினை வீரர் கண்டார்.”

இலக்கியத் தோற்றம்

ஒரு சமுதாயத்தில் இலக்கியம் வெளிப்படுதற்குக் காரணங்கள் யாவை? ஒருவருடன் ஒருவர் கலந்து வாழ்தல்