பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4. சங்ககால இலக்கியம்

சங்ககால இலக்கியம் தொல்காப்பியம், திருக்குறள், ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துப்பாட்டு சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன. எட்டுத்தொகையும். பத்துப் பாட்டும் ஏறத்தாழ 2280 செய்யுட்களை உடையவை. இப்பாடல்களை ஏறத்தாழ 500 புலவர்கள் பாடியுள்ளார்கள். அவர்களுள் பெண்பாற் புலவரும் இருந்தனர். 102 செய்யுட்களுக்கு உரிய ஆசிரியர்களின் பெயர்கள் தெரியவில்லை. இச்சங்ககால இலக்கியம் பற்றிய விவரங்கள் இந்நூலின் பல பகுதிகளில் உரைக்கப்படும். இவற்றுள் சில இன்பம் (இல்லற வாழ்க்கை) பற்றியவை; சில அறம், பொருள், வீடு பற்றியவை. இன்பம் பற்றியவை ‘அகம்’ என்றும், மற்றவை பற்றியவை ‘புறம்’ என்றும் பெயர் பெறும்.

வாழ்க்கையின் உயிர்நாடி

மனிதப் பேறுகள் ஆகிய அறம்—பொருள்—இன்பம்—வீடு என்னும் நான்கனுள் அகப்பொருள் என்னும் இன்பப் பகுதியே வாழ்க்கையின் உயிர்நாடியாக விளங்குவது. மனிதன் இன்பம் பற்றியே பொருளைத் தேடுகிறான்; பொருள் கொண்டு அறஞ் செய்கிறான். இம்முப்பேறுகளும் செம்மையுறச் செய்பவன் நான்காம் பேற்றை இயல்பாகவே, அடைவான். இதனாற்றான், பண்டைத் தமிழர் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையுமே வாழ்க்கையின் உயிர்நாடியாகக் கொண்டு வாழ்ந்துவந்தனர் என்பது சங்கப் பழம்பாடல்களால் அறியக்கிடைக்கிறது. தொல்காப்பியர்க்கு முற்பட்ட தொல்லாசிரியர்கள் வகுத்த அகம், புறம் என்னும் இரண்டு பகுதிகளையும் தழுவி, தம் காலத்திய மாறுதல்களையும் உள்ளடக்கித் தொல்காப்பியர் எழுதியுள்ள பொருள்