பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

இலக்கணம் ஒன்றே இன்றுள்ள சிறந்த அடிப்படை இலக்கண நூலாகும். அதனை இலக்கணமாகவும், அகநானுாறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு முதலியவற்றையும், திருக்கோவையார் முதலியவற்றையும் இலக்கியமாகவும் கொண்டு ஆராயின், பழந்தமிழ்ப் பெருமக்கள் பகுத்தறிவோடு அமைத்த அகப்பொருளென்னும் அழகிய இன்பமாளிகையைக் கண்டு களிக்கலாகும். இவற்றுடன் சைவசமய ஆசிரியர்கள் பாடியருளிய திருமுறைகளையும் ஆழ்வார்கள் பாடியருளிய அருட்பாடல்களையும் பக்கத்தில் வைத்து உணர்ச்சியோடு படிக்கப் படிக்க, அப்பெரியோர்கள் அகப்பொருள் இலக்கணத்தைத் தமது பக்தி நெறிக்கே உயிர் நாடியாகக் கொண்டிருந்தனர் என்பதைத் தெள்ளிதில் உணரலாம்.

அகப்பொருள் இலக்கணம்

இவ்வகப்பொருள் இலக்கணத்தை ஆராய்வதால் பண்டைத் தமிழ் மக்கள் மணம் செய்து கொண்ட முறைமை, அவர்தம் காதல் வாழ்க்கை, தலைவன் தலைவியரது இன்பத்திற்கு உதவும் பாங்கன் பாங்கியர், களவுப் புணர்ச்சியில் தலைவியும் தோழியும் தலைவனைச் சோதிக்கும் முறைகள், தனக்கு உண்டாகும் பல இடுக்கண்களைப் பொருட்படுத்தாமல் தலைவியை அடைவதில் தலைவன் கொள்ளும் முயற்சி, களவு வெளிப்பட்டபின் இருதிறத்துப் பெற்றோரும் நடந்துகொள்ளும் முறைமை, பெற்றோர் உடன்படாத போது தோழி தலைவியைத் தலைவனோடு கூட்டியனுப்புதல், அங்ஙனம் அனுப்பும்போது அவள் தலைவனிடம் கூறும் வாழ்க்கைக்கு இன்றியமையாத அறிவுரை, காதலர்க்குள் ஏற்பட்ட களவைத் தோழி தாய்மார்க்குக் குறிப்பாக உணர்த்தும் திறமை முதலியவற்றை நாம் அறிந்து மகிழலாம்.

களவொழுக்கம்

இனி இவை பற்றிய செய்தியைக் காண்போம்: இளைஞன் (தலைவன்) ஒருவன் பூம்பொழில் ஒன்றில்