பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

நாய் குரைக்கிறது; காவலர் திருடன் என்றெண்ணித் தேடுகின்றனர்: ஊர் விழித்துக் கொள்கிறது” என்றெல்லாம் கூறி, அவனைத் துன்புறுத்துகிறாள். தலைவன் இத் துணைச் சோதனைகட்கும் உட்பட்டு அவள் சொற்படி நடந்து, தான் தலைவி மீது கொண்ட களங்கமற்ற காதலின் உறுதியை வெளிப்படுத்துகிறான்.

களவு வாழ்க்கையில் தலைவி இல்செறிக்கப்பட்டபோது தலைவனை முன்புபோல அடிக்கடி சந்திக்க முடியாது. அவன் சிலநாட்கள் தொடர்ந்து வாராமலிருப்பான் அந்நாட்களில் தலைவி கவலையால் உடல் மெலிவாள். அவளது உடல் மெலிவைக் கண்டு செவிலித்தாயும் நற்றாயும் கவலை கொண்டு வேலனை அழைத்து யோசனை கேட்பர். அவன் வீட்டின் ஓரிடத்தில் முருகனை எழுந்தருளச் செய்து அக் கடவுள் முன் கழற்சிக்காய்களைப் போடுவான். அவன் தன் தலையில் ஆடை சூடியிருப்பான்; பல கணுக்களையுடைய கோலை ஏந்தியிருப்பான். அக்கணுக்களில் சிறு பைகளைக் கட்டியிருப்பான். அவன் அக்கோலால் கழற்சிக்காய்களை வாரியெடுக்கும் போது அவன் உள்ளத்திற் பட்டதைக் குறியாகக் கூறுவான். இது கழங்கு பார்த்தல் எனப்படும் (நற்றிணை. செ. 47).

சேரியின் முதுபெண்டாகிக் குறிசொல்பவளை வீட்டில் அழைத்து வந்து முற்றத்தில் பிடி நெல்லையிட்டு எதிரில் தலைமகளை நிறுத்துவர். உடனே தெய்வத்திற்கு வழிபாடு செய்யப்படும். குறிசொல்பவள் அப்பிடி நெல்லை நந்நான்காக எண்ணி எஞ்சியவை ஒன்று, இரண்டு, மூன்று அளவும் முருகனால் நேர்த்த குறை என்றும், நான்காகின் வேறொரு நோய் எனவும் கூறுவாள். இது ஒருவகைக் குறியாகும்; ‘கட்டுக் கேட்டல்’ எனப்படும் (நற். செ.288).

கழங்கு பார்த்தலிலும் கட்டுக் கேட்டலிலும் தலைவியின் நோய் ஆராயப்படும். இந்த நிகழ்ச்சிக்கு முன்பு அல்லது பின்பு-தோழி தலைவியின் காதலைத் தாய்மார்க்குக் குறிப்-