பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முகவுரை

கி. பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் பெரிப்ளுஸ் ஆசிரியர், பிளைநி, தாலமி என்ற கிரேக்கர் மூவரும் தமிழகத்து உள்நாட்டு ஊர்களைப் பற்றியும் துறைமுக நகரங்களைப் பற்றியும் மேல் நாடுகள் தமிழகத்தோடு செய்து வந்த வாணிகத்தைப் பற்றியும் சில செய்திகளை எழுதியுள்ளனர். பழந்தமிழ் நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு முதலிய நூல்களில் யவனர் பாவைவிளக்கு, யவனர் வாணிகம். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனரைப் பிடித்து அடக்கினமை போன்ற செய்திகள் காணப்படுகின்றன. கி. மு. முதல் நூற்றாண்டிலும் பின் நூற்றாண்டுகளிலும் வழங்கப்பட்ட ரோம நாணயங்கள் மதுரை முதலிய இடங்களில் கிடைத்துள்ளன.

இச்சான்றுகளைக் கொண்டு எட்டுத் தொகையும், பத்துப் பாட்டும் கி. பி. முதலிரண்டு நூற்றாண்டுகளில் செய்யப் பட்டவை என்னலாம்; சங்ககாலமே கி. பி. முதலிரண்டு நூற்றாண்டுகள் என்னலாம்[1] என்று வரலாற்று ஆசிரியர் சிலரும் தமிழ்ப் பேராசிரியர் சிலரும் தம் ஆராய்ச்சி நூல்களில் எழுதிவிட்டனர். அவர்கள் கூற்றை உறுதியாகக்கொண்டு பலரும் சங்ககாலம் கி. பி. முதலிரண்டு நூற்றாண்டுகளைச் சேர்ந்தது என்று கூறியும் எழுதியும் வருகின்றனர்.

தொகை நூல்களிலுள்ள செய்யுட்கள் ஒருவர் பாடியவை அல்ல. ஏறத்தாழப் புலவர் ஐந்நூற்றுவர் பாடியவை. அவற்றுள் யவனர் தந்த பாவை விளக்குப் பற்றியும், யவனரைப்பற்றியும் வருகின்ற செய்யுட்கள் மிகச் சிலவே யாகும். புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை இவற்றில் காணப்படும் பாரதப்போர், நந்தர்கள் பற்றிய செய்திகள், மோரியர் படையெடுப்பு ஆகியவற்றை

  1. சங்க காலம் கி. பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளாகலாம். சங்ககாலம் கி. பி. முதல் நாள்கு நூற்றாண்டுகளாகலாம் என்பர் வரலாற்றாசிரியர் திரு. K. A. நீலகண்ட சாஸ்திரியார். - A History of South India, pg. 112-113