பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

53


பிற திணைகள்: இங்ஙனம் காதலையும் போரையும் இரு கண்களாகக் கருதின சங்க காலத் தமிழர், யாக்கை நிலையாமையையும் செல்வம் நிலையாமையையும் நன்கு அறிந்திருந்தனர். சான்றோர் அவ்வப்போது அரசனுக்கு நிலையாமையை விளக்கிக் கூறி வீடு பேற்றுக்குரிய அறவழியில் செலுத்திவந்தனர். இங்ஙனம் நிலையாமையைப் புலப்படுத்துவது காஞ்சித் திணை என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். இத்திணையில் இருபது துறைகள் அமைந்துள்ளன.

தலைவன் புகழை விரும்புவதும், புலவன் பரிசில், வீடு பேறு முதலியவற்றை விரும்புவதும் உலக இயற்கை . இவ்வாறு அவரவர் விரும்பும் செய்திகள் பாடாண் திணை எனப்படும். இத்திணையிலும் பல துறைகள் உண்டு. தலைவனுக்கு அறிவுறுத்தல், தலைவனை வாழ்த்துதல், ஒருவனை ஒருவன் ஆற்றுப்படுத்தல், மன்னன் தன் புகழைக்கருதி மாற்றான் நாட்டை அழித்தல் முதலிய செயல்கள் எல்லாம் இத்திணையைச் சேர்ந்தவையாகும். தொல்காப்பியர் இத்திணை பற்றிய செய்திகளைப் பல நூற்பாக்களில் விளக்கியுள்ளார். பரிபாடலில் புறத்திணை பற்றிய பாடல்களும், பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய நூல்களில் உள்ள பாடல்களும், பத்துப்பாட்டில் பலவும் புறப்பொருள் இலக்கணத்திற்குரிய செய்யுட்களாகும். தொல்காப்பியத்தையும் தொகை நூல்களையும் படித்து இவ்விருவகை இலக்கணங்களின் சிறப்பையும் உள்ளவாறு அறிதலே ஏற்புடையது.