பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5. மதுரையில் தமிழ்ச் சங்கம்

முச்சங்கங்கள் பற்றிய செய்தி

இறையனார் களவியல் உரையில் நாலடி, சீவக சிந்தாமணி முதலிய நூல்களின் கருத்தும் சொற்றொடரும் காணப்படுவதால் அவ்வுரை பத்தாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதெனக்கொள்ளுதல் வேண்டும். பெரும்பாலும் 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் அவ்வுரை தோன்றியது எனக் கொள்ளுதல் மிகவும் பொருத்தமாகும்.[1] அவ்வுரையில் முச்சங்கங்களைப் பற்றிக் கீழ்வரும் விவரங்கள் தரப்பட்டுள்ளன.

இன்றுள்ள கள்ளிமுனைக்குத் தெற்கே ஒரு காலத்தில் பாண்டிய நாடு விரிவடைந்திருந்தது. அங்குப் பாண்டியன் தலைநகரம் இருந்தது. அக்கோநகரில் பாண்டியன் ஆதரவில் தமிழ் வளர்க்கச் சங்கம் ஒன்று தோற்றுவிக்கப்பெற்றது. அதனில் சிவபெருமான், முருகக் கடவுள், அகத்தியர்[2]


  1. எஸ். வையாபுரிப்பிள்ளை, இலக்கிய தீபம், பக். 29.
  2. அகத்தியர் தமிழ் இலக்கணத்தைச் செய்தார் என்று தொல்காப்பியரோ, பிற சங்ககாலப் புலவர்களோ கூறவில்லை. இச்செய்தியை முதன் முதல் கூறியுள்ளது இறையனார் களவியலுரையேயாகும். அதன் காலம் கி.பி. 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டு என்பது மேலே கூறப்பட்டதன்றோ? ‘அகத்தியர் பற்றிய கதைகள் எல்லாம் ஆரியர் தென்னாட்டிற்கு வந்ததையும் அவ்வருகைக்கு அவர் தலைவராயிருந்ததையும் குறிப்பனவாகக் கோடலே பொருத்தமாகும்’ - K. A. N. Sastry, A History of S. India, Pp. 57-70. கே. என். சிவராசப்பிள்ளையவர்கள் எழுதியுள்ள “தமிழகத்தில் அகத்தியர்” என்னும் நூலும் படித்துணரத் தகும்.