பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

55


உள்ளிட்ட 549 பேர் இருந்தனர். 4449 புலவர் தமிழாராய்ந்தனர். அச்சங்கம் 4440 ஆண்டுகள் நிலைத்திருந்தது. அத்தலைநகரமும் அந்நிலப் பகுதியும் கடல் கொந்தளிப்புக்கு இரையாயின.

பின்பு கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் ஏற்பட்டது. அதனில் அகத்தியர், தொல்காப்பியர் உள்ளிட்ட 59 பேர் இருந்தனர். 3700 புலவர் தமிழ்ப் பாடல்களைக் செய்தனர். இச்சங்கம் 3700 ஆண்டுகள் நடைபெற்றது. பின்பு கபாடபுரமும் கடலுள் ஆழ்ந்தது.

அதன் பின்பு இன்றுள்ள மதுரையில் ஒரு சங்கம் ஏற்பட்டது இச்சங்கத்தில் நக்கீரர் உள்ளிட்ட 49 புலவர் இருந்தனர். 449 புலவர் தமிழ்ப்பாக்களைச் செய்தனர். இச்சங்கம் 1850 ஆண்டுகள் இருந்தது. இங்ஙனம் மூன்று சங்கங்கள் இருந்தன என்பதற்கு இக்கூற்றைத் தவிர வேறு சான்றில்லை. ஆயின், மதுரையில் தமிழ்ச் சங்கம் இருந்தது என்பதற்கு இலக்கியச் சான்றும் பட்டயச் சான்றும் இருக்கின்றன.

சங்கம் இருந்தமைக்குப் பிற்காலச் சான்றுகள்

கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தருமி பொற்கிழி பெற்றதைத் தம் பாடலில் கீழ்வருமாறு குறித்துள்ளார்:

“நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி
நற்களகக் கிழிதருமிக் கருளி னோன்காண்”

என்பது அப்பர் தேவாரம் (6.76-3)

கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள்,

“சங்கத் தமிழ்”

என்று திருப்பாவையில் (செ. 30) குறித்துள்ளார்.

அதே நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வார்,

“சங்க முகத்தமிழ்”

என்று பெரிய திருமொழியிற் (3.4.10) பாடியுள்ளார் .