பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

57


வில்லுடையான் பாலை யிளஞ்சாத்தன் வேட்டனே
நெல்லுடையான் நீர்நாடர் கோ”
[1]

கி.பி 12- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பர், சோழ நாட்டைப் ‘புனல் நாடு’ என்றும், பாண்டிய நாட்டைத் தென் தமிழ்நாடு என்றும் குறித்துள்ளார். மேலும், அவர் ‘பாண்டிய நாடு முத்துகளுக்கும் முத்தமிழுக்கும் பெயர் பெற்றதாதலால் தேவர் நாட்டிலும் விஞ்சியது’, என்றும் கூறியுள்ளார். அவர் பாடிய செய்யுட்களைக் கீழே காண்க:

“அனைய பொன்னி அகன்புனல் நாடொரீஇ
மனையின் மாட்சி குலாமலை மண்டலம்
வினையின் நீங்கிய பண்பினர் மேயினார்
இனிய தென் தமிழ் நாடுசென் றெய்தினார்”

“அத்தி ருத்தகு நாட்டினை யண்டர்நா(டு)
ஒத்திருக்குமென் றாலுரை யொக்குமோ
எத்தி றத்தினும் ஏழுல கும்புகழ்
முத்து முத்தமி ழுந்தந்து முற்றலால்”
[2]


கி.பி. 12 அல்லது 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் பெரும்பற்றப் புலியூர் நம்பி பாடிய திருவிளையாடற் புராணத்திலும், 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பரஞ்சோதி முனிவர் பாடிய திருவிளையாடற் புராணத்திலும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தைப் பற்றிப் பல செய்திகள் காணப்படுகின்றன.

புறத்திரட்டில் சேர்க்கப்பட்டுள்ள ஆசிரிய மாலை என்னும் பழைய நூலின் செய்யுள் ஒன்றில்,

“பாடு தமிழ்வளர்த்த கூடல்”

என்று மதுரை பாராட்டப்பட்டுள்ளது. ‘ஆசிரிய மாலை’யின் காலம் திட்டமாகக் கூறக்கூடவில்லை யாயினும், பழங்கால நூல் என்பதில் ஐயமில்லை.


  1. யாப்பருங்கல விருத்தி, பக். 229.
  2. கிஷ்கிந்தாகாண்டம், ஆறுசெல்படலம், 52-53.