பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59


வித்துவான் ரா. இராகவையங்கார் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

“இதன் கண் ‘நல்லாசிரியர் புணர் கூட்டுண்ட புகழ்’ என்பது, நல்லாசிரியர் பலர் தம்முள் மனமொத்தியைந்த கூட்டத்தில் அவர்களோடு கல்வி இன்பம் துய்த்த புகழ் என்று கொள்க. நல்லாசிரியர் புணர்-நல்லாசிரியர் புணர்ப்பு (சங்கம்) என்றது, ஆசிரியர் தம்முளொத்துப் புணர்ந்த கலப்பினையுடைய அவையென்றபடி. பசுங்கூட்டென்பது பசிய பல பொருள்கள் கலந்ததற்கு வருவது போலப் புணர் கூட்டு-புணர்ந்த கூட்டம் எனினும் இயையும். ‘கூட்டுண்ட’ என்பது. ‘அவரோடு கலந்து துய்த்த’ எனினும் பொருந்தும். எங்கனமாயினும், இது பல்லாசிரியர் கூடியிருந்த நல்லவையையே குறிக்குமென்று துணிந்து கொள்க. ‘உண்ட’ வென்னும் வினையால் அக்கூட்டத்துள் இன்பம் துய்த்தவாறு கூறியதாம். இதற்கேற்பவே பனம்பாரனார் தொல் காப்பியப் பாயிரத்தில்,

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து”

எனக் கூறுதலும் நோக்கிக் கொள்க. இவ்வவைக்கண் தொல்காப்பியம் அரங்கேற்றியது கூறியவாற்றால், இவ்வவை, கற்ற பல பெரியார் குழுமிய நல்லவையாதல் தெள்ளிது. தமிழுக்குத் தலைசிறந்த இலக்கணமாகிய இப்பெருநூலைக் கேட்டு, அதன் நலந்தீங்கு காணவல்ல தமிழறிந்த பெரியார் இல்லாதது அவையுமாகாது அரங்கேற்றத்திற் குரியதுமாகாது என்பது கண்டு உண்மையுணர்க. இதனாற் பாண்டியர் கல்வி அவையம் கெடுங் காலத்துக்கு முன்னரே உளதாதலறியலாம்”.[1]

2. "தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரை"

என வரும் சிறுபாணாற்றுப்படை அடிகள் (வரி 66-67). மதுரையில் தமிழ்ப் புலவர்கள் வீற்றிருந்த தெருவைக்


  1. தமிழ் வரலாறு, பக். 46.