பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு.

குறித்தல் காணலாம். இதுபற்றி மகா வித்துவான் கூறுவதைக் கீழே காண்க:

"இதன்கண் நச்சினார்க்கினியர், 'தமிழ்நிலை பெற்ற மறுகின் மதுரை' எனக் கூட்டித் 'தமிழ் வீற்றிருந்த தெரு வினையுடைய மதுரை' என உரை கூறினார். தமிழ் வீற்றிருத்தல் தனியே நிகழாதென்பது யாம் கூறியறிவிக்க வேண்டுவதன்று. இது தமிழ்ப்புலவர் வீற்றிருந்த தெருவையே குறிக்கும் என்பது தெள்ளிது.”

“இமிழ்.குரல் முரசம் மூன்றுடன் ஆளுந் தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே’’

என்று காரிக்கண்ணனார் பாடிய புறப்பாட்டு (58) அடிகள் உணர்த்தும் உண்மை யாது? மூன்று முரசுகளுடன் முத்தமிழும் மதுரையில் ஆளப்பட்டன என்பதன்றோ கருத்து! “தமிழ் ஆளப்படுதல் என்பது, நாடுபோற் குற்றங்கடிந்து நல்லன கண்டு தமிழ் போற்றப்படும் சிறப்பான் என்று கொள்க” 8 -

4. கலித்தொகை 85-ஆம் செய்யுளில்,

"நிலனாவிற் றிரிதரூஉ நீண்மாடக் கூடலார்

புலனாவிற் பிறந்தசொற் புதிதுண்ணும் பொழுதன்றோ"

என்பது கூறப்பட்டுள்ளது. 'மதுரையில் உள்ள சான்றோருடைய அறிவுடைய நாவின்கண் தோன்றும் சொற்புதுமை' என்னும் குறிப்பு இதன்கண் இருத்தல் காணத்தக்கது. இது மதுரையில் கூடியிருந்த சான்றோரையும். அவர்தம் அறிவுடைய நாவன்மையையும், அவர் புதிது புதிதாகப் பாடும் செய்யுள் திறத்தையும் குறித்ததென்று எளிதில் அறியத்தகும். இது கூடற்கே (மதுரை) சிறந்தது. இல்லாவிடில்,

7. தமிழ் வரலாறு, பக், 47. 8. தமிழ் வரலாறு, பக் 59.