பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6


பல்லவர் ஏறத்தாழக் கி. பி. 300 முதல் கி. பி. 875 வரையில் தமிழகத்தில் பேரரசராய் இருந்தனர் என்பதும் வரலாறு கூறும் உண்மையாகும். தொல்காப்பியம் முதல் மணி மேகலை ஈறாக உள்ள சங்க நூல்களில் இப்பல்லவர்களைப் பற்றிய குறிப்பு ஒரு சிறிதும் காணப்படவில்லை; காஞ்சியில் திரையர் இருந்தமைக்கும் சோழர் இருந்தமைக்குமே சான்றுகள் காணப்படுகின்றன. எனவே, இந்நூல்கள் அனைத்தும் பல்லவர்க்கு முற்பட்ட நூல்கள் என்பது தெளிவாகும். ஆகவே, சங்ககாலத்தின் இறுதி எல்லை ஏறத்தாழக் கி. பி. 300 என்று கொள்ளப்பட்டது. அதன் மேல் எல்லை இன்றுள்ள சான்றுகளைக் கொண்டு வரையறுக்க இயலவில்லை. புறநானூற்றின் துணையைக் கொண்டு அதன் மேலெல்லையை ஏறத்தாழக் கி. மு. 1000 என்று கூறலாம். அக்காலத்திலும் கடல் வாணிகம் சிறப்புற நடைபெற்றது. இன்று கிடைத்துள்ள இலக்கியம் முதலிய சான்றுகளைக் கொண்டு, ஏறத்தாழக் கி. மு. ஆயிரத்திலிருந்து கி. பி. 300 வரையில் இருந்த பரந்துபட்ட காலமே சங்ககாலம் என்று கூறலாம். இந்த அடிப்படை உண்மையை உள்ளத்திற் கொள்ளின், நூல்களின் காலத்தைப் பற்றிய குழப்புமே தோன்றாது. தொகை நூற்பாடல்கள் கி. மு.விலும் பாடப் பட்டிருக்கலாம், கி. பி.யிலும் பாடப்பட்டிருக்கலாம் என்னும் உண்மையை உணர்தல் நல்லது.

காய்தல் உவத்தல் இன்றித் தமிழ் இலக்கண இலக்கிய தூல்களை நன்கு கற்று, கிடைக்கும் உண்மைகளை ஒன்று சேர்த்து, பிற நாட்டார் குறிப்புகளையும் இந்திய வரலாற்றினையும் ஒப்புநோக்கிச் சாத்திரீய முறையில் (Scientific Method) ஒரு முடிவுக்கு வருதலே உண்மை ஆராய்ச்சி எனப்படும். அத்தகைய உண்மை ஆராய்ச்சியே என்றும் நிலைத் திருக்கும்.

மிகப் பழைய காலம் முதல் ஏறத்தாழக் கி. பி. 300 வரையில் தமிழகம் சேர, சோழ, பாண்டியர் ஆட்சியில் இருந்தது என்பது தென்னிந்திய வரலாற்றால் தெளிவாகத்