பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

சென்று, படையுடன் மீண்டுவந்து, தன் தமையனைக் கொன்று, கி. பி. 230 இல் அரியணை ஏறினான்.[1]

ஈழத்து வாணிகம்

இலங்கை நாட்டுக் கதைகளில் வணிகர் கடல் கடந்து பல நாடுகட்குச் சென்று மீண்டமை கூறப்படுகிறது. வணிகர் சங்கங்கள் பிராமி கல்வெட்டுகளிற் குறிக்கப் பெற்றுள்ளன. இவற்றை நோக்க, இலங்கை மிகப்பழைய காலத்திலிருந்தே கடல் வாணிகத்தை மேற்கொண்டிருந்தது என்று கூறலாம்.

பலவகைப்பட்ட முத்துகள் இலங்கைத் தீவிற் கிடைப்பதாகச் சாணக்கியன் தனது பொருள் நூலில் எழுதியுள்ளான். அக்காலத்தில் இலங்கையின் வடமேற்குக் கடலில் முத்துகள் கிடைத்தன; முத்துகள் கிடைத்த இடத்திற்கும் வடக்கேயுள்ள கடலில் சங்குகள் மிகுதியாகக் கிடைத்தன. தென் இலங்கையில் உள்ள மலை நாட்டில் விலையுயர்ந்த மணிகள் கிடைத்தன. இக்காரணத்தால் இலங்கைத் தீவு ‘இரத்தினத் தீவு’ என்று பழைய நூல்களில் எழுதப் பெற்றது.

இலங்கையிலிருந்து அனுப்பப்பட்ட பொருள்களுக்கு ஈடாக அயல்நாட்டார் பொன், வெள்ளி, செம்பு, கண்ணாடி, பவழம், பலவகைப்பட்ட போலி இரத்தினங்கள், உயர்ந்த வகை மட்பாண்டங்கள், மது வகைகள், குதிரைகள் முதலியவற்றை இலங்கைக்குக் கொடுத்தனர். முதலில் இலங்கையோடு குதிரை வாணிகம் செய்தவர் தமிழரேயாவர்.

அசோகன் காலத்து இலங்கை இறைவனான தேவனாம் பிரிய திஸ்ஸன் அசோகனிடம் ஒரு தூதுக் குழுவை அனுப்பினான். அவருள் ஒருவன் வணிகர் தலைவன். அசோகன் அத்தலைவர்க்குச் ‘செட்டி’ என்ற பட்டத்தை வழங்கினான். பிராமிக் கல்வெட்டுகளில் தமிழ் வணிகர் குறிக்கப்பெற்றுள்ளனர்.


  1. 48. Ibid. pp 187-188.