பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. தொல்காப்பியம்
(1) தொல்காப்பியத்தின் பழைமை

சங்க நூல்கள்

     தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு, அக நானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன சங்க நூல்கள் என்பதும், சங்ககாலம் என்பது ஏறத்தாழக் கி.பி. 300 உடன் முடிவு பெற்றது என்பதும், அதன் தொடக்கம் கூறற்கியலாப் பழைமை வாய்ந்தது என்பதும் முன்னரே கூறப்பட்டவை. இப்பரந்து பட்ட காலத்தில் பல இலக்கண நூல்களும் இலக்கிய நூல்களும் தோன்றின. அழியக்கூடிய பனையோலை ஏடுகளில் எழுதப்பட்ட காரணத்தாலும், கடல் கோள்கள் போன்ற பேரழிவுகளினாலும் பல நூல்கள் அழிந்து போயின; போனவை போக, மேலே கூறப்பெற்ற நூல்கள் இன்று சங்க நூல்கள்’ என்னும் பெயரில் உயிர் வாழ்கின்றன. காலப்போக்கில் மறைந்தொழிந்த நூல்களின் பெயர்கள் சில தொல்காப்பிய உரை, சிலப்பதிகார உரை, யாப்பருங்கல உரை முதலிய உரைகளிற் காணக் கிடக்கின்றன.

சங்ககாலத் தமிழ்

    தொல்காப்பியர் தமக்கு முற்பட்ட இலக்கண ஆசிரியர் பலர் இருந்தனர் என்பதை, என்ப' என்மனார் புலவர்' எனத் தம் நூலில் பல இடங்களில் குறித்துள்ளார்: "யாப்பென மொழிய யாப்பறி புலவர் என்றாற் போலவும். பல இடங்களில் கூறியுள்ளார்; ஆயின் வடசொற்கள் தமிழில் வழங்குவதற்கு விதிகூறும் இரண்டு இடங்களிலும்,