பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

              தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

’ என்ப" என்மனார்' என்னும் சொற்களை ஆளாததை நோக்க, அவர்க்கு முன்பு இருந்த இலக்கண ஆசிரியர்கள் காலத்தில் பிறமொழிச் சொற்கள் தமிழிற் புகவில்லை என்பது தெரிகிறது; தெரியவே, தமிழ் தனித்தியங்கிய காலம் இருந்தது என்பது தெளிவாகிறதன்றோ?

   சங்ககாலம் மிகப் பரந்துபட்டது என்பது முன்பே கூறப்பெற்றது. இதன் முற்பகுதியில் (தொல்காப்பியத்திற்கு முன்பு) வடவர் கூட்டுறவு தமிழகத்தில் இல்லை. எனவே, தொல்காப்பியத்திலும் பிற சங்க நூல்களிலுமே வட சொற்கள் தமிழிற் கலந்தன. பெரும்பாலும் சமயத் தொடர்பான சொற்கள் இப்பிறமொழிச் சொற்களாகவே காணப்படுகின்றன. எனவே, பிறமொழிச் சொற்களைச் சிலவாகக் கொண்ட செய்யுட்களும் சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளன என்பதை இங்கு அறிதல் நலம். வடநாட்டுப் புராணக் கதைகளும் புத்த சாதகக் கதைகளும் சில தொகை நூற்பாக்களிலும், மணிமேகலையிலும் சிலப்பதிகாரத்திலும் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பரந்துபட்ட சங்ககாலத்தின் இறுதியில் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் செய்யப்பட்டவை. இந்த உண்மைகளை உளங்கொள்ளின் சங்ககாலத்தின் முற்பகுதி தமிழ் மட்டும் வழங்கிய பகுதி என்பதும், பிற்பகுதி தமிழோடு பிறமொழிகளும் கலந்து வழங்கிய பகுதி என்பதும் நன்கு அறியப்படும். இவ்வுண்மையைத் தொல்காப்பியத்திலேயே காணலாம்.
தொல்காப்பியம்
    தொல்காப்பியம், இன்றுள்ள சங்க நூல்களுள் காலத்தால் முற்பட்டது என்பது பலர் கருத்து. முற்காலத்திலிருந்த தமிழ் நூல் வகைகளையும் செய்யுள் வகைகளையும் உலக வழக்காகிய நெறிமுறைகளையும் அறிவதற்குச் சிறந்த கருவியாக உள்ளது இந்நூலே என்பது அறிஞர் கருத்து. இந்நூல் எழுத்து, சொல் , பொருள் என்னும் மூன்றையும் பற்றி எடுத்துக் கூறுவது. இதன்கண் உள்ள விதிகளைக் கூர்ந்து நோக்கின், அவற்றுக்கெல்லாம் அடிப்