பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97

தம்மை ஆதரித்த சேந்தனைப் புகழ்ந்து பாடியிருப்பதன் வாயிலாகப் புலப்படும்.

திவாகர நூலுக்கு முன்னுல் காப்பு என்னும் தலைப்பில் ஒரே ஒரு செய்யுள் மட்டும் உள்ளது. நூலாசிரியர்கள் தம்மையும்-நூலையும் காக்குமாறு பிள்ளையாரையோ அல்லது பிற கடவுளரையோ வேண்டிக் காப்புச் செய்யுள் பாடுவது மரபு. திவாகரர் பிள்ளையாரை வேண்டிக்கொண்டுள்ளார். அந்தக் காப்புச் செய்யுள் வருமாறு:

“தந்திமுகத்து எந்தை சதங்கைப் பதம்போற்றிச்
சிந்தை விளக்காம் திவாகரத்துள்-வந்த
தொகுதியொரு பன்னிரண்டும் சோராமல் நேரே
பகுதியுற மனமே பற்று.”

இப்பாடலிலுள்ள 'தந்தி முகத்து எந்தை' என்பதற்கு, யானை முகத்தையுடைய விநாயகக் கடவுள் என்பது பொருள். இவ்வாறு பிள்ளையார் வணக்கம் பாடியிருப்பதால், திவாகரர் சைவ சமயத்தவர் என்பது எளிதில் விளங்கும். மேலும், நிகண்டின் முதல் தொகுதியாகிய தெய்வப் பெயர்த் தொகுதியில் சிவன் பெயர்களையே இவர் முதலில் தொடங்கியுள்ளார். இதனாலும் இவர் சைவர் என்பது பெறப்படும். சமண சமயத்தவராகிய மண்டல புருடர் தமது சூடாமணி நிகண்டின் தொடக்கத்தில், சமணக் கடவுளாகிய அருகன் பெயர்களையே முதலில் தொடங்கியிருப்பது ஈண்டு குறிப்பிடத் தக்கதாகும். அன்றியும், சைவ சமயத்தானாகிய சேந்தனால் ஆதரிக்கப்பெற்று, அவன் பெயரையும் தம் நூலுக்கு இட்ட திவாகரரும் சைவ சமயத்தவராகத்தானே இருந்திருக்கக்கூடும்.