பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

மேற்கூறிய பன்னிரண்டு தொகுதிகளையும் மூன்று வகைக்குள்ளும் அடக்கிவிடலாம். அதாவது. முதல் பத்துத் தொகுதிகளையும் சேர்த்து ஒரு பொருள் பல் பெயர்த் தொகுதி என்னும் தலைப்புக்குள் அடக்கிவிடலாம். ஏனெனில், இந்தப் பத்தும் ஒரே முறையைப் பின்பற்றியவையாகும். அதாவது, தெய்வம் முதல் ஒலி யீறாக உள்ள பத்துப் பொருள்களுள் ஒவ்வொரு பொருளையும் குறிக்கும் பல பெயர்களும் (Class vocabularies) தொகுத்துக் கூறப்பட்டிருப்பதால்-எடுத்துக் காட்டாக, சிவன் என்னும் தெய்வத்திற்கு எத்தனை பெயர்கள் உண்டோ அத்தனை பெயர்களும் கூறப்பட்டிருப்பதால்-இந்தப் பத்துத் தொகுதிகளையும் ஒரு பொருள் பல்பெயர்த் தொகுதி என்னும் ஒரே தலைப்பால் குறிப்பிடலாமன்றோ அடுத்துப் பதினொன்றாவது தொகுதியை ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி என அதே தலைப்பாலேயே குறிப்பிடலாம். இப்பகுதியில்தான், நாம் இப்போது கையாண்டு வரும் அகராதிப் பயன் அமைந்திருக்கிறது. அதாவது: (Homonyms) ஒரு சொல்லுக்கு உரிய பல பொருள்களும் (அணி என்றால் அழகு, ஆபரணம், அணிதல், வரிசை என்பது போல) கொடுக்கப்பட்டுள்ளன. இறுதியாக உள்ள பன்னிரண்டாம் தொகுதியையும் பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி என்னும் அதே தலைப்பாலேயே குறிப்பிடலாம். இப்பகுதியில், முக்காலம் என்றால் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்பது போல--நால் நிலம் என்றால் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்பது போல--ஐம் பொறி, என்றால் மெய், வாய், கண், முக்கு, செவி என்பது போலக் குழுப் பெயர்கட்கு (Group-names) விளக்கம் கொடுக்கப்படும். நானிலம் என்னும் ஒரு பெயர்