பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

அகராதி எனப்பட்டது. இதனை ‘அகர வரிசை’ என்னும் பெயராலும் இன்று அழைக்கின்றனர். அகரத்தை முதலாகக் கொண்டு அ,ஆ,இ,ஈ, என்ற வரிசையில் சொற்கள் செல்வதால் ‘அகர வரிசை’ என இக்காலத்தில் தனித் தமிழ்ப் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த அகரவரிசை முறையை ஆங்கிலத்தில் ‘ஆல்பா பெடிகல் ஆர்டர்’ (Alphabetical Order) என்பர். இப்பெயர் ‘கிரீக்’ (Greek) மொழியிலிருந்து வந்ததாகும். Alpha என்பது ஒரு சொல்; Beta என்பது மற்றொரு சொல். Alpha என்பது A என்னும் எழுத்தில் தொடங்குகிறது; Beta என்பது B என்னும் எழுத்தில் தொடங்குகிறது. A என்பது கிரீக் மொழியின் முதல் எழுத்து; B என்பது அம்மொழியின் இரண்டாம் எழுத்து. கிரீக் எழுத்துக்களிலிருந்து தான் இலத்தீன் எழுத்துக்கள் தோன்றின. இலத்தீன் எழுத்துக்களால் தான் ஆங்கிலம், பிரெஞ்சு, செர்மனி முதலிய ஐரோப்பிய மொழிகள் எழுதப்படுகின்றன. எனவே, ஐரோப்பிய மொழிகளில் A, B, C, D’ வரிசை என்று சொல்வதற்குப் பதிலாக, Aவில் தொடங்கும் Alpha என்னும் சொல்லையும், Bயில் தொடங்கும் Beta என்னும் சொல்லையும் இணைத்து Alphabet வரிசை என்கின்றனர். அ, ஆ வரிசை என்பதற்குப் பதில் ‘அணில் ஆடு வரிசை என்று சொல்வது போன்றதாகும் இது. A, B என்னும் எழுத்துக்களை அறிமுகஞ் செய்ய Alpha, Beta என்னும் சொற்கள் பயன்படுத்தப் படுவதைப் போல, இந்தக் காலத்தில் முதல் வகுப்பு மாணவரின் சுவடியில் அ, ஆ என்னும் எழுத்துக்களை அறிமுகப்படுத்த அணில், ஆடு, என்னும் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன வன்றோ? எனவே, ஆங்கிலத்தில் Alphabetical Order என்பதுபோல, தமிழில் ‘அணிலாடு