பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

எனலாம். ஆனால், தொல்காப்பியத்தில் பொருள் கூறப்பட்டுள்ள சொற்கள் இக்கால அகராதிபோல் அகரவரிசையில் இல்லை என்பது ஈண்டு நினைவில் வைக்கற்பாலது.

தமிழிலக்கணத்தில் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் எனச் சொற்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முருகன், மாடு, வீடு எனப் பொருள்களின் பெயரைக் குறிக்குஞ் சொற்கள் பெயர்ச் சொற்கள். வா, போ என வினையை (செயலைக்) குறிக்குஞ் சொற்கள் வினைச் சொற்கள். தனித்துப் பொருள் தராமல், அவனே, செய்தானோ எனப் பெயர்ச் சொல்லோடும் வினைச் சொல்லோடும் சேர்ந்து பொருள் தரும் ஏ, ஓ போன்ற பெயரும் அல்லாத–வினையும் அல்லாத - இரண்டுக்கும் இடைப்பட்ட சொற்கள் இடைச் சொற்களாம். கறுப்பு, சிவப்பு, முழுமை போன்ற பண்புச் சொற்கள் உரிச் சொற்களாம்.

கறுப்பு, சிவப்பு, முழுமை எனத் தனியே பொருட்கள் இல்லை; எனவே இவை, பொருளின் பெயரைக்குறிக்கும் பெயர்ச் சொற்களுமல்ல; இவை செயல்களும் அல்லவாதலின் வினைச் சொற்களும் அல்ல. உள்ளத்தாலும் ஐம்பொறிகளாலும் உய்த்து (யூகித்து) உணரப்படும் பண்புகளே (abstract) இவைகள். அதாவது, கறுப்பு என ஏதாவது ஒரு பொருளைத் தனியே பிரித்துப் பார்க்க முடியாது; ஒரு பொருளில் கறுப்பு நிறம் என ஒன்று தெரியும் அவ்வளவு தான். மற்ற பண்புகளும் இப்படியே. இவ்வகையாக, நிறம், அளவு, தன்மை, உணர்வு முதலிய பண்புகளைக் குறிக்குஞ் சொற்கள் உரிச் சொற்கள் எனப்பட்டன. உரிச் சொல் என்பதற்கு, செய்யுட்கு உரிமை பூண்ட