பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

21



அவற்றிற்கு மட்டும் பொருள் கூறினார் போலும். அவற்றுள்ளும், வெளிப்படையாக எளிதில் பொருள் தெரியும் சொற்களை விட்டுவிட்டு அரிய சொற்கட்கு மட்டுமே ஆசிரியர் பொருள் கூறியுள்ளார். இதனைத் தொல்காப்பிய உரியியலிலுள்ள

“வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா வெளிப்பட வாரா உரிச்சொல் மேன.”

என்னும் நூற்பாவால் அறியலாம். மேலும் ஆசிரியர், ‘அரிய சொற்கள் எனினுங்கூட எல்லாச் சொற்களையும் இங்கே கூற முடியாது; சொற்களுக்கு உரிய எல்லாப் பொருள்களையுங்கூட (அர்த்தங்களையுங்கூட) சொல்ல முடியாது; விடுபட்ட சொற்களையும் பொருள்களையும் வந்தவிடத்துக் கண்டு கொள்க’ என்றும் முடிவில் அறிவித்துள்ளார். இச் செய்திகளை, இடையியலின் இறுதியிலுள்ள

“கிளந்த அல்ல வேறுபிற தோன்றினும் கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே.”

என்னும் நூற்பாவானும், உரியியலின் இறுதியிலுள்ள

“கூறிய கிளவிப் பொருள்நிலை அல்ல வேறுபிற தோன்றினும் அவற்ருெடுங் கொளலே.”

“அன்ன பிறவும் கிளந்த அல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் லெல்லாம் பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கின் இனைத்தென அறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித்து ஓம்படை ஆணையிற் கிளந்தவற் றியலான் பாங்குற உணர்தல் என்மனார் புலவர்.”