பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

25



கட்கு முன் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. அதற்கும் முன்னால் ஆதி திவாகரம் எனவும் ஒருநூல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதற்கும் முன்னால் நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் என்னும் புலவரால் இப்படியொரு நூல் இயற்றப்பட்டிருக்கலாம் என உய்த்துணரப்படுகிறது. இப்படி வைத்துப் பார்க்குங்கால், மூவாயிரம் ஆண்டுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் தொல்காப்பியத்திற்கு முன்னால் சில நூற்கள் தோன்றி மறைந்து விட்டது போலவே, அத்தொல்காப்பியத்துக்குப் பின்னும் சில நூற்றாண்டுகள் வரை சில நூற்கள் தோன்றி மறைந்திருக்க வேண்டும் எனக் கருத இடமுண்டு. இதை நம்ப முடியாதென்றால், தொல்காப்பியத்தின் காலத்தை இன்னும் சில நூற்றாண்டுகள் பின்னுக்குத் தள்ள வேண்டிவரும்.

ஆகக் கூடியும், அகராதித் துறையில் தொல்காப்பிய உரியியலுக்குப் பின் நமக்கு உருப்படியாகக் கிடைத்துள்ள முழு நூற்களுள் சேந்தன் திவாகரம், பிங்கலம் ஆகிய இரண்டும் முற்பட்டவை. இவற்றின் காலம் கி. பி. எட்டாம் நூற்றாண்டெனச் சொல்லப்படுகிறது. இந்நூற்கள் 'நிகண்டு என்னும் பொதுப் பெயர் ஏற்று, திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு என மக்களால் அழைக்கப்படுகின்றன. இந்நிகண்டுகளையடுத்து, சூடாமணி நிகண்டு, கயாதர நிகண்டு, உரிச்சொல் நிகண்டு முதலிய நூற்றுக்கணக்கான நிகண்டு நூற்கள் தோன்றின. இவையெல்லாம் பின்னர்த் தனித்தனித் தலைப்புக்களின் கீழ் விளக்கப்படும்.