பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

தமிழ்க் கொள்கையினர் ஒருசாரார் கூறுகின்றனர். இதற்கு இன்னொரு வகையாகவும் பொருட்டு (காரணம்) கூறலாம் :

நீளம் என்பதை நிகளம் எனவும் நீண்டது என்பதை நிகண்டது எனவும் பேச்சு வழக்கில் மக்கள் சிலர் சொல்வதைக் கேட்கலாம். நிகளம் என ஒருசார் செய்யுள் வழக்கும் உண்டு. இந்த வழக்குகளை யொட்டிப் பார்க்குங்கால், நிகண்டு என்னும் சொல்லுக்கு, நீண்டது என்று பொருள் கொள்ளலாம். சொற்களின் பட்டியல் நீளமாகத் தரப்பட்டிருத்தலின்-அதாவது-சொற்களின் பட்டியல் நிகண்டு (நீண்டு) கொண்டுபோதலின் ‘நிகண்டு’ என்னும் பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாம். நிகளுவது நிகண்டு. எளிய மக்களின் பேச்சு வழக்கிலும் நிகண்டு என்னும் சொல்லாட்சியைக் காணலாம்; அது வருமாறு:–

“எனக்கு இந்த வேலை ஒரு நெகுண்டு இல்லே”; “அவன் அந்த வேலையை ஒரே நெகுண்டா முடிச்சு விட்டான்”; “நான் வழியில் எங்கும் நிற்காமல் ஒரே நெகுண்டா போய்ச் சேர்ந்தேன்”...... முதலிய வழக்காறுகள் தென்னார்க்காடு மாவட்டத்திலுண்டு. மற்ற மாவட்டங்களிலுங் கூட இருக்கலாம். இந்த வழக்காறுகளில் ‘நிகண்டு’ என்னும் சொல்தான் ‘நெகுண்டு’ எனக் கொச்சையான உருவத்தில் காணப்படுகிறது. ‘இந்தவேலை ஒரு நெகுண்டு இல்லை’ என்றால் தொடர்ந்து செய்ய முடியாத அளவுக்கு நீண்டு கொண்டு போகும் ஒரு பெரிய வேலையன்று என்பது கருத்து. வேலையை ‘ஒரே நெகுண்டா முடித்து விட்டான்’ என்றால், இடையீடின்றி நீண்ட நேரம் தொடர்ந்து செய்து வேலையை முடித்து விட்டான் என்பது கருத்து. ‘ஒரே நெகுண்டா

2