பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

போய்ச் சேர்ந்தேன்’ என்றால், நீண்ட தொலைவைத் தொடர்ந்து கடந்து சென்றேன் என்பது கருத்து. ‘ஒரே நெட்டாய்ப் போய்ச் சேர்ந்தேன்’ என்றும் சிலர் சொல்வதுண்டு. நெட்டாய் என்பதற்கும் நெகுண்டாய் என்பதற்கும் பொருள் ஒன்றே; இவ்விரண்டிற்கும் அடிப்படைகளாகிய நெடுமை (நெட்டாய்), நிகளம் (நெகுண்டாய்) என்னும் இரண்டும் ஒரே பொருளுடையனவன்றோ ?

எனவே, சொற்கள் நீளத் தொடர்ந்து கொடுக்கப்பட்டிருக்கும் நூல் ‘நிகண்டு’ எனப்பட்டது. இப்படிப் பொருள் கொள்ளின், நிகண்டு என்னும் சொல் தமிழ்ச் சொல்லே என்பது பெறப்படும். நிகண்டு என்பதை வடசொல்லெனக் கொண்டு பார்த்தால், தொகுதி-கூட்டம் என்பது அதன் பொருளாகும்; எனவே, சொற்கள் தொகுதியாக - கூட்டமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் நூல் நிகண்டு என்பது பெறப்படும்; இந்தப் பெயர்க் காரணம் பொருந்துமென்றால், நிகண்டு என்பதைத் தமிழ்ச் சொல்லாகக் கொண்டு, சொற்கள் ஒரு பட்டியல் போல நீளத்தொடர்ந்து கொடுக்கப்பட்டிருக்கும் நூல் நிகண்டு எனக்கூறும் பெயர்க்காரணம் மட்டும் ஏன் பொருந்த முடியாது? எனவே, நிகளுவது நிகண்டு என்னும் முடிவுக்கு வரலாம்.

உரிச்சொல் :

திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு, கயாதர நிகண்டு முதலிய நூற்கள் நிகண்டு என்னும் பொதுப் பெயரால் அழைக்கப் பட்டது பிற்காலத்தில்தான்; முதற் காலத்தில் இந் நூற்கள் ‘உரிச் சொல்’ என்னும் பொதுப்-