பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

33



இறுதியில், ஏடு பெயர்த்து எழுதியவரால் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:--

“950-ம் ௵ புரட்டாசி ௴ 14௳ ஆழ்வார் திரு நகரி மாசித்தெரு தேவர்பிரான் கவிராயர் உரிச்சொல் நீடுழி வாழ்க...”

இதிலும் உரிச்சொல் என்று கூறப்பட்டிருப்பது காண்க. இவ்வாறே இன்னும் பல சான்றுகள் கொடுத்துக் கொண்டே போகலாம்.

பவணந்தியார் இயற்றிய நன்னூலுக்கும் சில நூற்றாண்டுகள் பிற்பட்டனவாகிய கயாதரம், உரிச்சொல் நிகண்டு ஆகியவற்றிலும் உரிச்சொல் என்னும் பெயர் காணப்படுவதை நோக்கின், இப்பெயர் 16-ஆம் நூற்றாண்டுக்கு மேலும்—ஏன்—17, 18-ஆம் நூற்றாண்டுகள் வரையுங்கூட வழக்கில் இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

உரிச்சொல் என்னும் பெயர் மறையாமல் நடைமுறை வழக்கில் இருந்துகொண்டிருக்கும்போதே அதற்குப் போட்டியாக நிகண்டு என்னும் பெயரும் தோன்றிவிட்டதாகத் தெரிகிறது. திவாகரம், பிங்கலம் ஆகியவற்றிற்குப் பின்னால் தோன்றி அவற்றினும் மிகுதியாக மக்களால் பயிலப்பட்டு வந்ததும், பதினாறாம் நூற்றாண்டில் தோன்றியதாகச் சிலராலும் அதற்கும் முன்னமேயே தோன்றியதாகச் சிலராலும் சொல்லப்படுவதுமாகிய சூடாமணி நிகண்டையியற்றிய மண்டல புருடர் என்னும் அறிஞரே, அச் சூடாமணியின் பாயிரப் பாடலில் அதனை ஒரு நிகண்டு எனக் குறிப்பிட்டுள்ளார்: