பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

35



இருந்து வந்தமை தமிழறிஞர்களால் உணரப்பட்டதோடு, அவர்தம் உள்ளங்களை உறுத்தியும் வந்தது. அதன் பயனாக, இக்குறையை நிறையாக்கும் முயற்சிகள் சில முகிழ்க்கத் தொடங்கின.

முதல் நிகண்டுகளாகிய திவாகரமும் பிங்கலமும் அகரவரிசையில் ஆசிரியர்களால் இயற்றப்படவில்லைதான். ஆனால், சில நூற்றாண்டுகள் கழிந்ததும் இந்நூற்களைக் கற்பித்தவர்களும், கற்றவர்களும் திவாகரரும் பிங்கலரும் அமைத்த முறைக்கு மாறாகச் சொற்களை அகர வரிசையில் மாற்றியமைத்து எழுதிவைத்துக் கொண்டனர். பின்னர் அச்சிட்டவர்களும் அவ்வாறே செய்து கொண்டனர். இந்த விவரங்கள் தனித்தனி நிகண்டுத் தலைப்புக்களில் பின்னர்த் தரப்படும்.

திவாகரமும் பிங்கலமும் இயற்றிய ஆசிரியர்கட்கு அகர வரிசை முறை நினைவு வரவில்லை யாயினும், இந்நூற்கட்கு அடுத்தபடிப் பெருவாரியாக மக்களால் பயிலப்பட்டு வந்த சூடாமணி நிகண்டை இயற்றிய ஆசிரியர் மண்டல புருடர் இதில் கவனம் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் சொற்களை எதுகை வாரியாகப் பிரித்தார். சொற்களின் இரண்டாவது எழுத்து ஒத்து ஒரேமாதிரியாய் இருப்பதற்கு ‘எதுகை’ என்று பெயராம். எடுத்துக்காட்டாக, பகவன், பகல், மகரம், அகம் ஆகிய சொற்களில் இரண்டாவது எழுத்தாக ‘க’ என்னும் ஒரே எழுத்தே இருக்கிறது; இப்படியிருக்கும் சொற்கட்குக் ‘ககர எதுகைச் சொற்கள்’ என்பது பெயர். ‘க’ தொடங்கி ‘கௌ’ வரையும் உள்ள எழுத்துக்களுள் எந்த எழுத்தையாவது இரண்டாவது எழுத்தாகக்