பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464

சொல் பெருகிய கதை

முதற்காலத்தில் இயற்கையான மலைக் குகைகளை இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்த மக்கள், பின்னர் நாளடைவில் மலைகளிலிருந்து தனித் தனியாகக் கற்களை உடைத்துப் பிரித்தெடுத்துச் சுவர் எழுப்பிச் செயற்கையான வீடு கட்டிக்கொண்டு வாழ்ந்தனர். மலைப் பகுதிக்கு நெடுந்தொலைவில் இருந்தவர்கள் மண்ணைப் பிசைந்து சுவர் எழுப்பினர். பின்பு வன்மை யற்ற மண் சுவரின் நிலையாமையை உணர்ந்த மக்கள், மண்ணைப் பிசைந்து தனித்தனிப் பகுதியாக அறுத்துச் சூளையில் இட்டுச் சுட்டுச் செங்கற்களாக்கிச் சுவர் எழுப்பினர். இதனினும் இன்னும் வன்மை விரும்புபவர்கள், கருஞ்சுதை மண்ணால் (சிமட்டியால்) கல்லுண்டாக்கிக் கட்டடம் கட்டுகின்றனர்; மற்றும், கோன்கிரீட்' (Concrete) எனப்படும் கல் பொதிந்த காரைக் கலவையாலும் கட்டடம் அமைக்கின்றனர்; மேலும், கம்பியிடையிட்ட கல் கலவையாலும் (Reinforced concrete) கட்டடங்களை உறுதிப்படுத்துகின்றனர். உறுதிக்கும் திருத்தத்திற்கும் அழகிற்கும் உறுதுணை யாக இன்னும் எத்தனை எத்தனையோ முறைகள் தோன்றிக்கொண்டிருக்கின்றன. இது கல் (கட்டடம்) பெருகிய கதை. சொல் பெருகிய கதையும் இது போன்றதே! கற்பனை செய்து காண்க.

முதற்காலத்தில் மக்கள் இயற்கையாக எழுப்பிய ஒலித் தொகுப்பிலிருந்து சொற்கள் தனித்தனியாகப் பிரிந்து பிறந்தன. பிறந்த சொற்களாகிய குழந்தைகள்

465