பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

68

கருத்தன், அளவு, மிகுதி, பொருள், செய்வித்தோன், தன்மை ஆகிய நிமித்தங்களால் (காரணங்களால்) பெயர் பெற்றமைக்கு எடுத்துக்காட்டாகச் சிற்சில நூற்களின் பெயர்களைக் குறிப்பிட்டுவிட்டு, இடுகுறியால் பெயர் பெற்ற நூலுக்கு எடுத்துக்காட்டாகப் பின்வருமாறு எழுதியுள்ளார்:—

“இடுகுறியாற் பெயர் பெற்றன நிகண்டு நூல், கலைக்
கோட்டுத் தண்டு முதலாயின.”

இதே நூற்பாவின் உரையில் சங்கர நமச்சிவாயர் என்னும் உரையாசிரியர் பின்வருமாறு எழுதியுள்ளார்:—


“இடுகுறியாற் பெயர் பெற்றன நிகண்டு கலைக் கோட்டுத்
தண்டு முதலாயின.”

நன்னூலின் உரைகளிலேயன்றி, ‘இறையனார் அகப்பொருள்’ என்னும் களவியல் இலக்கண நூலின் உரையிலும் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:—

“இடுகுறியாற் பெயர் பெற்றன நிகண்டு நூல், கலைக்
கோட்டுத் தண்டு என இவை.”

இவ்வாறு நன்னூல் உரையிலும், இறையனார் அகப்பொருள் என்னும் களவியல் உரையிலும் எழுதப்பட்டிருப்பதற்குத் தக்க சான்று பகர்வது போல், ‘நிகண்டன் கலைக் கோட்டுத் தண்டனார்’ என்னும் சங்க காலப் புலவர் ஒருவரின் பெயர் அடிபடுகிறது. நற்றிணை என்னும் சங்க இலக்கியத்திலுள்ள “கானல் மாலைக் கழிநீர் மல்க” என்று தொடங்கும் 382-ஆம் பாடல் இவர் பாடியதே. இப்பாடல் ஒன்றின் வாயிலாகத்தான் இவர் தமிழ் மக்கட்கு