பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91

கூறுகின்றனர். அவர்கள் கூறுவதற்குச் சான்று, இரண்டு நூற்களிலும் ஒத்து வந்துள்ள காவிரி, அம்பர் (அம்பல்), அருவந்தை என்னும் மூன்று சொற்களுமேயாம். புறநானூற்றில் அம்பர் கிழவோன் என இடையின 'ர்' உள்ளது. திவாகரத்திலோ அம்பற் கிழவோன் என வல்லின 'ற்' உள்ளது. வல்லின 'ற்' இருப்பதால் புணர்ச்சியிலக்கணப்படி 'அம்பல்' எனப் பிரித்துக்கொள்ள நேரிட்டது. புறநானூற்றின் வேறு ஓர் ஒலைச் சுவடியில் 'அம்பல்' என்றே உள்ளது. எனவே ஒரு பெயரே சுவடிக்குச் சுவடி மாறுபடுவது இயற்கை ஆனால், அருவந்தை என்னும் சொல்தான் பொருளளவில் மாறுபட்டுள்ளது. புறநானூற்றின்படி 'அருவந்தை' என்பது அரசனது பெயராகும். திவாகரத்தின்படியோ-சிலர் கருத்துப்படி 'அருவந்தைச் சேந்தன்' என ஊரின் பெயராகத் தெரிகிறது.

நடுநிலையுடன் ஆராயுங்கால், திவாகரத்திலுள்ள அருவந்தை என்பதை ஊரெனச் சொல்லாமல் அரசனது பெயராகவே கொள்ளலாமே! அதாவது 'அருவந்தைச் சேந்தன்' என்பதற்கு, அருவந்தை என்னும் பட்டப் பெயருடைய-குடும்பப் பெயருடைய சேந்தன் எனப் பொருள் கொள்ளலாமே? அதாவது, பாண்டியன் நெடுஞ்செழியன்-பாண்டியன் அறிவுடை கம்பி, சோழன் நலங்கிள்ளி-சோழன் நெடுங்கிள்ளி என்னும் பெயர்களிலுள்ள பாண்டியன், சோழன் என்னும் குடிப் பெயர்களைப் போல, அருவந்தைச் சேந்தன் என்பதிலுள்ள அருவந்தை என்பதும் குடும்பப் பட்டப் பெயராக இருக்கலாமன்றோ?

எனவே, காவிரி, அம்பல், அருவந்தை என்னும் சொற்கள் புறநானூற்றிலும் திவாகரத்திலும் இருப்