பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

பதும் உண்மைதான் எனினும், இந்தச் சான்றைக் கொண்டு, புறநானூற்று அம்பர்கிழானும் திவாகரத்து அம்பற் கிழானும் ஒருவனே என முடிவு கட்டுதல் ஏற்புடைத்தாகாது. அவன் வேறு-இவன் வேறு ஒருவேளை, இவன் அவனது மரபில் வந்தவன யிருக்கலாம். இதற்குக் காரணமும் கூறமுடியும்: புறநானூற்றுப் பாடலில் சேந்தன் என்னும் பெயரின் வாடையே காணப்படவில்லை; அரசனது பெயராக அருவந்தை என்னும் சொல்தான் உள்ளது. இருவரும் ஒருவரேயானால், இவ்வளவு விளம்பரம் உள்ள சேந்தன் என்னும் பெயர் புறநானூற்றுப் பாடலில் வராமற் போக வழியில்லை. மேலும், அப்புறப்பாட்டைப் பாடியவர் கல்லாடர்; அவர் சங்க காலத்தைச் சேர்ந்த புலவர். புறநானூற்றுப் பாடல்களும் சங்க காலத்தன. பெரும்பாலான ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, சங்க காலம் கி.பி. 3 அல்லது 5-ஆம் நூற்றாண்டிற்குள் முடிவடைவதாகத் தெரிகிறது. ஆனால், திவாகரரும் திவாகரச் சேந்தனும் சங்க காலத்திற்குப் பிற்பட்டவர்கள் என்று துணிவதற்கு இடமுண்டு. சில சான்றுகள் வருமாறு:

(1) திவாகரர் தமது நூலின் தொடக்கத்தில் விநாயகர் காப்புப் பாடல் பாடியுள்ளார். மற்றும், முதல் தொகுதியாகிய தெய்வப் பெயர்த் தொகுதியில் விநாயகருக்கு உரிய பெயர்களை,

"ஒற்றைக் கொம்பன், விநாயகன், ஐங்கரன்,
வெற்றி யானை முகவன், கணபதி,
பாசாங்குச தான், ஆகு வாகனனே.”

என்னும் பாடலில் கூறியுள்ளார். ஆராய்ச்சியாளரின் கூற்றுப்படிப் பார்த்தால், பழந்தமிழகத்தில் விநாயகர்