பக்கம்:தமிழ் அங்காடி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98 தமிழ் அங்காடி



வாலி முன்னமேயே மராமரங்களைத் துளைத்த செய்தி வால்மீகத்தில் இருப்பதை உள்ளத்தில் கொண்டு ‘ஓட்டை மரம்' எனக் கம்பர் குறிப்பிட்டிருப்பது நயமானது.

சிறியனோ?

மீண்டும் வீடணன் தமையனை நோக்கி, திருமாலே அரக்கர்களை அழிக்க இராமனாக வந்துள்ளார்; ஆதலின் சீதையை விடுதலே சிறந்தது எனக் கூறினான். அதற்கு இராவணன் கூறலானான்:

இந்திரனை யான் சிறையிட்ட போதும், ஐராவதம் என்னும் தேவ யானையின் கொம்பை யான் சிதைத்த போதும், அத்திருமாலைப் புறமுதுகிட்டு ஓடச் செய்த போதும், தேவருலகை யான் வென்றபோதும் நீ சொல்லும் அந்தத் திருமால் என்னை ஏன் ஒன்றும் செய்ய முடியவில்லை? அப்போது அவன் மிகவும் சிறியவனாய் இருந்தான் போலும்! - என்று கிண்டல் செய்தான்:

"இந்திரன்தனை இருஞ்சிறை யிட்ட
நாள் இமையோர்
தந்திகோடு இறத் தகர்த்தநாள்
தன்னை யான் முன்னம்
வந்த போர்தொறும் துரந்தநாள்
வானவர் உலகைச்
சிந்தவென்ற நாள் சிறியன்கொல்
நீ சொன்ன தேவன்!” (113)

இமையோர் = தேவர். தந்தி =யானை. தேவன் = திருமால். முன்பெல்லாம் திருமால் என்னுடன் மோத முடியாமைக்குக் காரணம், அப்போதெல்லாம் அவன் சிறியவனாயிருந்தானோ - இப்போதுதான் பெரியவன் ஆனானோ? - இது பெரிய கிண்டல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/100&oldid=1203468" இலிருந்து மீள்விக்கப்பட்டது