பக்கம்:தமிழ் அங்காடி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102 தமிழ் அங்காடி


செய்வார்கள் என்பது தெரியாது - ஆதலின் என்க. இங்கே, திருவள்ளுவரின் 'உட்பகை’ என்னும் தலைப்பில் உள்ள பத்துக் குறள்களுமே எண்ணத்தக்கவை யாகும். அவற்றுள்ளும்,

“வாள்போல் பகைவரை அஞ்சற்க;
அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு” (882)

என்னும் குறள் மிகவும் ஒப்புநோக்கத் தக்கது. மற்றும், ஒளவையாரின் மூதுரை என்னும் நூலில் உள்ள

“உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி” (20)

என்னும் பாடல் பகுதி, இராவணன்.வீடணன் ஆகியோரின் நிலைமைக்கு ஒத்து வரும்,

பிறப்பு மாற்றம்

மேலும் தொடர்கிறான்:நீ மனிதர்க்கு அஞ்சி அவர் களின் சார்பைத் தேடுகிறாய்; ஆதலின் நீ போருக்கு ஏற்றவன் அல்லன். வஞ்சக உள்ளத்தனாகிய நீ பிறப்பையே மாற்றிவிட்டாய். நஞ்சை உடன் வைத்துக் கொண்டு உயிர் வாழ்தல் இயலாது.

"அஞ்சினை ஆதலின் அமர்க்கும் ஆளிலை
தஞ்சென மனிதர்பால் வைத்த சார்பினை
வஞ்சனை மனத்தினை பிறப்பு மாற்றினை
நஞ்சினை உடன்கொடு வாழ்தல் நன்மையோ” (8)

பகைவரின் துணையுடன் என்னைக்கொன்று அரசைப் பற்றும் கரவு உள்ளம் உடையவன் நீ. ஆதலான் வஞ்சனை மனத்தினை’ என்றான்.

'பிறப்பு மாற்றினை' என்பதற்கு, அரக்கர் பிறப்பிற்கு உரிய செயல் இன்றி மனிதர் நிலைக்குச் செல்கிறாய் என்பதாகப் பொருள் கூறப்படுகிறது. இதற்கு இன்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/104&oldid=1203469" இலிருந்து மீள்விக்கப்பட்டது