பக்கம்:தமிழ் அங்காடி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106 தமிழ் அங்காடி


வந்துள்ள அவனுக்கு ஒரு தலையும் இரு கைகள் மட்டுமே உள்ளனவே - மற்றவை சிதைந்து விட்டனவோ? இவனைப் பிடியுங்கள், அடியுங்கள், தூக்கி எறியுங்கள் என்று கூறிப் போருக்கு வருமாறு அழைத்து எதிர்க்கத் தொடங்கினர். (பாடல் 37)

இந்த நேரத்தில் அனுமன் தலையிட்டு வானரர்களை அடக்கி, மயிந்தன், துமிந்தன் என்னும் இரு வானரரை மட்டும் அனுப்பி வீடணனிடம் சென்று யார்- எவர் என விசாரித்து வரச் சொன்னான். அங்ஙனமே சென்று, நீங்கள் யார்? என்ன வேலையாய் வந்தீர்கள்? போர் புரிய வந்தீர்களா? அல்லது வேறு வேலையாய் வந்தீர்களா? என மயிந்தன் வினவினான். (பாடல் 42)

மகன் மகன் மைந்தன்

மயிந்தன் வினவியதற்கு, வீடணனின் துணைவர்களுள் ஒருவனான அனலன் பின்வருமாறு கூறலானான்:

இதோ வந்திருக்கும் எங்கள் தலைவனாகிய வீடணன், நான்முகனின் பேரனுக்கு மகனாவான்; மெய்ம்மைப் பண்பினன், நல்ல எண்ணத்தினன், அறநெறி நிற்பவன். இராமனது திருவடியை அடைக்கலமாகப் பெற்றுக் கடைத்தேற வந்துள்ளான்:

"பகலவன் வழிமுதல் பாரின் நாயகன்
புகல்அவன் கழல் அடைந்து உய்யப் போந்தனன் தகவுறு சிந்தையன் தரும நீதியன் மகன்மகன் மைந்தன் நான்முகற்கு, வாய்மையான்’
(43)

பகலவன் வழி முதல் = ஞாயிறு குலத்தவனாகிய இராமன். பாரின் நாயகன் என்பதும் இராமனையே. நான் முகனுக்குக் கொள்ளுப் பேரன் - மகனுக்கு மகன் என்றால் பேரன், அந்தப் பேரனுக்கு மகன் கொள்ளுப் பேரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/108&oldid=1203474" இலிருந்து மீள்விக்கப்பட்டது