பக்கம்:தமிழ் அங்காடி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார் 107


அதாவது:- நான்முகன் மகன் புலத்தியன் - அவன் மகன் விச்சிரவசு - அவன் மகன் வீடணன்.

நான்முகனுக்குக் கொள்ளுப்பேரன் என்பதனால், அரக்கன் என எண்ணாமல் அந்தணச் சார்புடைவன் என உயர்வாக எண்ணச் செய்ய இவ்வாறு முறை கூறினான்.

மற்றும், தகவுறு சிந்தையன், தரும நீதியன், வாய்மையன் என்றெல்லாம் - அடைக்கலப் பொருளாக ஏற்றுக் கொள்ளுவதற்கு உரிய பக்கச் சொல் எல்லாம் சொல்லினான். பக்கச் சொல் பதினாயிரம் பொறுமே!

நான்காம் வேற்றுமையில், உடைய பெயருக்கு உடைமைப் பெயர் முறைப் பெயரா யிருந்தால் ‘கு’ உருபு வரும் என்னும் இலக்கண அமைப்புக்கு ஏற்ப 'நான்முகற்கு’ எனப்பட்டுள்ள பொருத்தம் சுவைக்கத்தக்கது. (இப்போது வழக்காற்றில் இது இல்லை).

மற்றொரு வியப்பான அமைப்பு இச்செய்யுளில் பொதிந்துள்ளது. மயிந்தன் வினவியதற்கு வீடணனே பதில் இறுக்காமல் அனலன் பதில் இறுத்ததுதான் அது வீடணனே தன் பெருமையைத் தானாகக் கூறிக்கொள்வது பொருத்த மாகாது. தானே கூற நாணமாயிருக்கும். பிறர் கூறுவதென்றால், எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளி விடலாம். உலகியலில் இதைப் பல முனைகளிலும் காணலாம். இந்த உலகியல் முறைக்கு ஏற்பக் கதையைக் கொண்டுபோகும் கம்பரின் திறன் மிகவும் பாராட்டி மகிழ்தற்கு உரியது.

இராமனை மயக்க முயன்ற சூர்ப்பணகையும் தன்னை நான்முகனின் கொள்ளுப் பேர்த்தி என முதலில் கூறிய கதைப் பகுதியும் ஈண்டு நினைக்கத் தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/109&oldid=1203475" இலிருந்து மீள்விக்கப்பட்டது