பக்கம்:தமிழ் அங்காடி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  111


அறமும் 'சீறும்' என்னும் சொல்லாட்சி, "என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பிலதனை அறம்" (77) என்னும் குறளிலுள்ள ‘அறம் காயும்' என்பது போன்றது.

முதலில் ஒருவரை நட்பு பூண்டு சேர்த்துக் கொண்ட பின் கைவிடலாகாது என்பது ஒருவகைப் பொது விதி. இதனை,

“நட்டபின் விடில்லை நட்பாள்பவர்க்கு" (791)

என்னும் குறள் பகுதியானும், நற்றிணையில் உள்ள.

"நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே" (32)

என்னும் பாடல் பகுதியாலும், நாலடியாரில் உள்ள-

"நல்லார் எனத்தாம் கனி விரும்பிக் கொண்டாரை அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்"

(221)

என்னும் பாடல் பகுதியாலும் இனன பிறவற்றாலும் அறியலாம்.

மற்றும், அடைக்கலப் பொருளைக் காத்தலின் சிறப்பைச் சிலப்பதிகாரம் அடைக்கலக் காதையில் உள்ள பின்வரும் பகுதியால் அறியலாம்:

“தவத்தோர் அடைக்கலம் தான்சிறி தாயினும்
மிகப் பேரின்பம் தருமது கேளாய்” (149-150)

கோவலனுடன் கண்ணகியை அடைக்கலமாகப் பெற்ற மாதரி, அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை-அதாவது - சிறிதளவு கால இடைவெளியில் கோவலன் இறந்து பட்டான் - கண்ணகி கைம்பெண்ணானாள்; பின் இறந்து விட்டாள். தன் அடைக்கலப் பொருளைக் காப்பாற்ற முடியாது போனமைக்காக மாதரி தீக்குளித்து உயிர் விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/113&oldid=1203484" இலிருந்து மீள்விக்கப்பட்டது