பக்கம்:தமிழ் அங்காடி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  119


"எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன்.....
பெரும்பெயர்ப் புகார் என் பதியே (20-51, 52, 56)

என்னும் பாடல் பகுதியாலும் இன்ன பிறவற்றாலும் அறியலாம்.

வீடணனை ஏற்காமல் துறந்து விடின் அந்த நாளைக் காட்டிலும், அவனால் தீமை நேரின் இறந்து போகும் நாள் சிறந்ததாம். அந்த இறந்த நாளே உயிரோடு இருந்த நாளாகக் கணிக்கப்படுமாம். ஈண்டு,

"ஒப்புரவினால் வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து" (220)

“சாதலின் இன்னாத தில்லை இனிது அதூஉம்
ஈதல் இயையாக் கடை"(230)

"ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்’ (214)

என்னும் குறள்கள் ஒப்பாய்வு செய்யத் தக்கன.

வரலாறுகள்

இராமன் சில வரலாற்றைக் கூறுகிறான்:

கடல் கடைந்தபோது தோன்றிய நஞ்சுக்கு அஞ்சித் தேவர்கள் புகல் வேண்டியபோது சிவன் அந்த நஞ்சை உண்டு தேவர்களைக் காக்கவில்லையா?

பெட்டைப் புறாவைப் பிடித்த வேடன் தன்னையும் பிடிக்க வந்தபோது, ஆண் புறா தீ மூட்டி அத்தீயில் தான் விழுந்து பதம்செய்வித்துப் பசியினால் வருந்தும் வேடனை உண்ணச் செய்யவில்லையா?

ஆதி மூலமே என்று அலறி அடைக்கலம் கேட்ட யானையை முதலை வாயிலிருந்து திருமால் காப்பாற்ற வில்லையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/121&oldid=1203499" இலிருந்து மீள்விக்கப்பட்டது