பக்கம்:தமிழ் அங்காடி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  125



பின்னர், வீடணனுக்கு முடிசூட்டுமாறு இராமன் இலக்குவனை ஏவ அவ்வாறே இலக்குவன் முடி சூட்டினான் வீடணன், அரக்கன் இராவணன் பின்னே தோன்றிய இழிதகைமை தீர்வதற்காக, பரதனுக்குச் சூட்டியது போலவே இராமனுடைய பாதுகையையே முடியாகச் சூட்டுமாறு செய்து கொண்டான்.

"களவியல் அரக்கன் பின்னே
தோன்றிய கடன்மை தீர
இளையவற் களித்த மோலி
என்னையும் கவித்தி என்றான்" (143)

திருநாவுக்கரசர் சமணரோடு சின்னாள் இருந்த பொல்லாங்கு தீர்வதற்காகச் சிவனது இலச்சினையைத் தருமாறு வேண்டிய செய்தி இங்கே ஒப்பு நோக்கத் தக்கது. இது பெரிய புராணம் - திருநாவுக்கரசர் பகுதியில் சொல்லப் பட்டுள்ளது.

'புன்னெறியாம் அமண் சமயத்
தொடக்குண்டு போந்த உடல்
தன்னுடனே உயிர் வாழத்
தரியேன் நான் தரிப்பதற்கு
என்னுடைய நாயக நின்
இலச்சினை இட்டருள்" (150)

என்பது பாடல்.

தம்பி முறை

பின் இராமன் வீடணனை நோக்கி, நாங்கள் உடன் பிறந்தவர்கள் நால்வர்-பின் குகனோடு ஐவரானோம்; அதன் பின் சுக்கிரீவனோடு அறுவரானோம்; இப்போது நின்னைச் சேர்த்து எழுவரானோம். உன் தந்தையாகிய தயரதன் என்னைக் காட்டுக்கு அனுப்பியதால், பிள்ளைப் பேற்றுச் செல்வம் மிகுதியாய் உடையவனானான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/127&oldid=1204176" இலிருந்து மீள்விக்கப்பட்டது