பக்கம்:தமிழ் அங்காடி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126  தமிழ் அங்காடி


"குகனொடும் ஐவ ரானேம்
முன்,பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவ ரானேம்
எம்முழை அன்பின் வந்த
அகனமர் காதல் ஐய
நின்னொடும் எழுவ ரானேம்
புகலரும் கானம் தந்து
புதல்வரால் பொலிந்தான் நுந்தை” (144)

குன்று சூழ்வான் மகன் = சுக்கிரீவன். நுந்தை = உன் தந்தையாகிய தயரதன், வீடணன் அன்போடு வந்தானாம்-எத்தகைய அன்போடு வந்தான்? - அகன் அமர் காதலோடு அதாவது உண்மையாக உள்ளத்தில் கொண்டுள்ள காதலோடு வந்தானாம்.

"முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு" (786)

என்னும் குறள் ஈண்டு ஒப்புநோக்கற் பாலது. நெஞ்சத்து அகம் = உள் மனம் (Inner Mind). இதுதான் அன்பின் வந்த அகனமர் காதல் ஆகும்.

தயரதன் வீடணனுடைய தந்தை என்னும் பொருளில் 'நுந்தை’.எனக் குறிப்பிட்டிருப்பது மிகவும் உயர்ந்த உள்ளப் பாங்கைக் குறிக்கிறது. இதுபோல் உறவு முறை கொண்டாட வைப்பதில் கம்பர் மிகவும் வல்லவர். இந்த வல்லமையை வேறிடங்களிலும் காணலாம்.

பின்னர், வீடணனுக்கு முடி சூட்டியதை மற்றவர்க்கும் அறிவித்து உறுதி செய்யவும், அரசு முறைக்கு ஏற்பவும், வீடணனுடன் படைகள் தங்கியிருக்கும் பாடிவீட்டைச் சுற்றி வரச் செய்யுமாறு இராமன் இலக்குவனுக்குக் கட்டளையிட்டான். அவ்வாறே இலக்குவனுடன் வீடணன் பாடி வீட்டைச் (பாசறையைச்) சுற்றி வந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/128&oldid=1448584" இலிருந்து மீள்விக்கப்பட்டது