பக்கம்:தமிழ் அங்காடி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  137


இயலவில்லை. இந்நிலையில், பிரகலாதன் தந்தையை நோக்கி நரசிங்கப் பெருமானை வணங்கும்படி மீண்டும் வேண்டினான். அதற்கு, இரணியன் பின்வருமாறு கூறலானான்:-

வணங்காமை

பிரகலாதா! அந்தக் கோள் அரியின் தோளையும் தாளையும் உன் எதிரிலேயே வெட்டிக்கொன்று மற்றும் உன்னையும் கொலை செய்து என் மற வாளைத் தொழுவேனே யல்லாமல், வணங்குதல் என்பது மகளிர் ஊடலின் போது கூட இல்லை எனக் கூறி அண்டங்கள் நடுங்கும்படிச் சிரித்தானாம்.

"கேளிது நீயும் காணக்
கிளர்ந்த கோளரியின் கேழில்
தோளொடு தாளும் நீக்கி
நின்னையும் துணித்துப் பின்என்
வாளினைத் தொழுவதல்லால் வணங்குதல்
மகளிர் ஊடல்
நாளினும் உளதோ என்னா
அண்டங்கள் நடுங்க நக்கான்" (146)

கோள் அரி = நரசிங்கம். கேழ் இல் = ஒப்பற்ற. மகளிரின் ஊடல் நாளினும் வணங்கமாட்டேன் என இரணின் கூறியதிலிருந்து, மனைவி ஊடல் கொள்ளின் கணவன் மனைவியின் கால்களில் விழுந்து ஆறுதல் செய்வது உண்டு என்பது தெரிகிறது. இது உண்மையோ - பொய்யோ . இவ்வாறு கூறுதல் ஒரு வகை இலக்கிய மரபு. மணி மேகலையில் இப்படி ஒரு செய்தி கூறப்பட்டுள்ளது.

இலக்குமி என்பவள் ஊடல் கொள்ள, அவளுடைய காம வயப்பட்ட கணவனாகிய இராகுலன் என்பான் அவள் காலில் விழுந்து வணங்கினானாம். (இது முற்பிறப்புச் செய்தி).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/139&oldid=1204200" இலிருந்து மீள்விக்கப்பட்டது