பக்கம்:தமிழ் அங்காடி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  149


"பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர் என்
கைக்கொள் பாசத்துக் கைப்படுவோரெனக்
காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்
பூதம் புடைத்துணும் பூத சதுக்கமும்” (5:131-134)
"மற்றவன் கணவற்கு வறியோன் ஒருவன்
அறியாக் கரிபொய்த்து அறைந்துனும் பூதத்துக்
கறைகெழு பாசத்துக் கையகப் படலும்”
(15:77-79)

என்பன பாடல், பகுதிகள். கரி பொய்த்தல் = பொய்ச் சான்று கூறுதல்.

சிலம்பில் வரந்தரு காதையில் 'பொய்க்கரி போகன் மின்’ என இளங்கோவடிகள் கூறியுள்ளார்.

இங்கே 'மொழியின் பொய்த்த சான்றவன்’ எனக் கம்பர் கூறியிருப்பது மிகவும் எண்ணத் தக்கது. ஒருவன் மற்றொருவனைக் கொலை செய்தது இவனது உள்ளத்திற்கு நன்றாகத் தெரியும். ஆனால், நீதி மன்றத்தில் உள்ளத்தை மறைத்து, 'கொலை செய்ய வில்லை’ எனச் சொல்லால் (மொழியால்) பொய் உரைக்கின்றவன் - என்பது இதன் கருத்து.

கம்பரின் பாடலுக்கு அரணாக, ஒப்பிலக்கிய மேற்கோள்கள் மேலே தரப்பட்டன.

உப்பும் அப்பும்

கடலில் பல உயிர்களும் வருந்துகின்றன. மேலும் மேலும் இராமன் அம்புகளை எய்து கொண்டிருக்கிறான். இதனால், உப்புக் கடல் என்று இழிவாகக் கருதப்பட்ட கடல் இப்போது அப்புக் (அம்புக்) கடல் என உயரிய பெயர் பெற்றதாம். மேலோர் சினப்பினும் நன்மையாகவே முடியும் என்பதை இதனால் தெரிந்து கொள்ளலாம்:-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/151&oldid=1204218" இலிருந்து மீள்விக்கப்பட்டது