பக்கம்:தமிழ் அங்காடி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152  தமிழ் அங்காடி



"ஆழியின் புனல்அற மணிகள் அட்டிய
பேழையின் பொலிந்தன பரவை; பேர்வறப்
பூழையின் பொருகணை உருவப் புக்கன
மூழையின் பொலிந்தன முரலும் வெள்வளை" (52)

பூழை = துளை. மூழை = அகப்பை. வளை - சங்கு. பரவை - கடல்.

வேல் தைத்த தலைகள் அகப்பைகள்போல் தெரிவதாகக் கலிங்கத்துப் பரணியில் கூறப்பட்டிருப்பது இங்கே ஒருபுடை ஒப்பு நோக்கத் தக்கது.

“கங்கா புரியின் மதில் புறத்துக்
கருதார் சிரம்போய் மிகவீழ
இங்கே தலையின் வேல்பாய்ந்த
இவை மூழைகளாக் கொள்ளீரே" (563)

என்பது பாடல். கம்பரின் கற்பனையைக் கலிங்கத்துப் பரணி ஆசிரியராகிய சயங்கொண்டர் இந்த வடிவில் கூறியிருப்பாரோ!

புலவர் சீற்றம்

இராமன் நூறாயிரம் அம்புகள் விட்டதால், ஆங்கு உள்ள மலைகள் நூறாயிரம் கோடித் துண்டுகளாகச் சிதறினவாம். முத்துகள் எல்லாம் ஒன்று நூறாக உடைந்தனவாம். பெரியோர் சினந்தால் எதுவும் மிகுமே தவிரக் குறையாது.

"நின்று நூறாயிரம் பகழி நீட்டலால்
குன்று நூறாயிரம் கோடி ஆயின
சென்று தேய்வுறுவரோ புலவர் சீறினால்?
ஒன்று நூறாயின உவரி முத்தெலாம்” (53)

நூாறாயிரம் = இலட்சம். இலட்சம் என்னும் வட சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் நூறாயிரம் என்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/154&oldid=1204222" இலிருந்து மீள்விக்கப்பட்டது