பக்கம்:தமிழ் அங்காடி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154  தமிழ் அங்காடி


என்று சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலம் என்னும் நல்லவள் எள்ளிச் சிரிப்பாள் என்னும் பொருளில்,

“இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலம் என்னும் நல்லாள் நிகும்" (1040)

என வள்ளுவர் திருக்குறளில் கூறியுள்ளார்.

நிலத்தைச் சுற்றிக் கடல் இருப்பதால், நிலமகள் கடலை உடையாக உடுத்துள்ளாள் எனப்பல இலக்கியங்கள் கற்பனை செய்துள்ளன. மற்றும் ஒன்று வருக:சுந்தரம் பிள்ளை மனோன்மணியம் என்னும் நாடகக்காப்பியத்தில், ‘நீராரும் கடல் உடுத்த நிலமடந்தை’ என்று கூறியுள்ளார்.

திருமண காலத்தில், திருமண அரங்கில் மணமகனது பக்கத்தில் அமர்ந்திருக்கும் மணமகள் உடுத்துள்ள புடவைக்குக் கூறைப் புடவை என்பது பெயர். திருமணத்தின் முன், கூறைப்புடவை படைத்தல் என்னும் ஒரு மரபும் உண்டு. கூறை நெய்யும் 'கூறைநாடு’ என்னும் பெயருடைய ஓர் ஊர் மயிலாடுதுறையின் அருகில் உள்ளது.

தறி நெய்பவர்கள் உடையை நீளமாக நெய்வர்; பிறகு வேண்டிய அளவுக்குக் கூறுபடுத்துவர்; அதனால் இதற்குக் கூறை என்னும் பெயர் ஏற்பட்டது. கூறுபடுத்துவது கூறை. இது போலவே, இடையிலே அறுத்து எடுப்பது அறுவை, துண்டு துண்டாகக் கிழித்து எடுப்பது துண்டு; துணிப்பது (வெட்டுவது) துணி; வெட்டுவது வேட்டி, வாய்ப்பு நேருங்கால் இவற்றையெல்லாம் தெரிவிப்பது நல்லது.

நீலக்கடலை உடுத்திருந்த நிலம், இராமன் அம்புகளால் மாறுபாடு அடைந்த அதாவது வேலைப்பாடு மிகுந்த கூறையை உடுத்துப் புதுமணப்பெண் போல் பொலிவுடன் காணப்பட்டது பொலிந்து தோன்றினாள்'எனக் கம்பர் புனைவு செய்துள்ள நயம் சுவைக்கத் தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/156&oldid=1204228" இலிருந்து மீள்விக்கப்பட்டது