பக்கம்:தமிழ் அங்காடி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162  தமிழ் அங்காடி


ஒருசொட்டுக் குருதி உள்ள வரையிலும்
உயிர்தந்து காப்பர் உயர்தமிழ் என்றே
அயர்வின் றுணர்ந்த அதியமான் ஒளவைக்கு
உயிர்தரு நெல்லி உவந்தளித் தானரோ!
காதலி வழங்குங் கலவி விருப்பால்
காதல் பணிபுரி காதலன் மான
மோசி கீரற்கு முன்னொரு சேரன்
வீசினன் விசிறி வியன் தமிழ் விருப்பால்!
வேந்தரும் கழகம் வீற்றிருந் தருளி
மாந்தினர் தமிழ்த்தேன் மடுத்து மடுத்தே!
சுவைதரு கூடல் தொன்னகர்க் கழகம்
சிவனும் போந்து செந்தமிழ் ஆய்ந்தான்.
கூடல் மன்னன் குறைவு செய்ததால்
வாடி வண்டமிழ்ப் புலவன் இடைக்காடன்
நீடிய மதுரையின் நீங்கவே, சிவன்
தேவி தன்னொடும் திருநகர் நீங்கி
இடைக்கா டன்பின் ஏகினன் என்பரால்!
காஞ்சி மன்னன் கணிகண்ணனை விலக்க
அவன்றன் தலைவர் மழிசை ஆழ்வாரும்
அவன்பின் சென்றதை அறிந்த மாலவன்
செந்தமிழ் ஆழ்வார் பின்னே சென்றனன்!
பைந்தமிழ்ப் பெருமை பன்னற் பாற்றோ!
இவையெலாம்,
தலையாய தமிழ்க்கு நிலையாய மகுடமாம்!
தலைவி வினவல்: ஓகோ!
தொன்மையும் இனிமையும் தொல்பெரு மைகளும்
நன்மகுட மாவ தியாங்ஙனம் நவிலுமின்!
தலைவன் கூறல்: ஆம் ஆம்!
இடங்களும் கழகமும் இரும் புகழ் நூல்களும்
ஒடுங்கி யொருகால் ஒழிந்திடக் கூடும்.
முப்பெருங் கழகம், மூதூர், நூல்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/164&oldid=1204254" இலிருந்து மீள்விக்கப்பட்டது